Monday, December 29, 2014

அறம் வரிசையில்

அன்புள்ள ஜெ.,

நேற்று படித்த இந்த செய்தியில் உங்கள் அறம் வரிசை நாயகர் ஒருவரைக் கண்டேன்.. ஊடகத்திற்கே உரிய மிகைப்படுத்தல் இருக்கலாம்.. இருப்பினும் இதுபோன்ற தருணங்களே நம் அறத்தை ஒருபடி மேலே கொண்டு செல்கிறது போலும்...

<a href="http://timesofindia.indiatimes.com/world/pakistan/For-the-first-time-I-couldnt-control-my-tears-says-gravedigger-in-Peshawar/articleshow/45588243.cms">http://timesofindia.indiatimes.com/world/pakistan/For-the-first-time-I-couldnt-control-my-tears-says-gravedigger-in-Peshawar/articleshow/45588243.cms</a>

நன்றி
ரத்தன்

வணக்கம்,

நான் தாழக்குடி பள்ளத்தெருவில் இருந்து வெங்கடேஷ் எழுதுகிறேன். நான் உங்கள் சோற்று கணக்கு எனும் சிறுகதையை படித்து விட்டு உடனே அக்கணமே இக்கடிதம் எழுதுகிறேன்.

கதை மிகவும் அருமையாகவும் ஆழமாகவும் இருந்தது. கரடி கையையும் தாய் கை ஆகியது அழகு.

இது தான் நன் படிக்கும் உங்களுடைய முதல் கதை.

நம்ம ஊர்க்காரர் என்றதும் எனக்கு பெருமிதம்.சந்தோஷம்.

அறம் புத்தகத்தை கண்டிப்பாக இன்னும் இருநாட்களில் படித்து விடுவேன்.
எல்லா மக்களும் அறம் பெறட்டும்.

வாழ்த்துகள்.
நன்றி.

வெங்கடேஷ்

Wednesday, December 17, 2014

தோரோவும் யானைடாக்டரும்

மென்மையான செடியின் வேர்கள் கடினமான பாறைகளின் இடுக்குகளிலும், கடினமான நிலங்களிலும், ஒளி ஊடுருவமுடியாத இடங்களிலும், மலைகளின் அடிகளிலும் நுழைந்து செல்ல முடியும். யாராலும் தடுக்க முடியாது. அன்பும் செடியின் வேரைப்போல …

 --தோரோ

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு யானை டாக்டர் வழியாகத்தான் நான் உங்களை வந்தடைந்தேன். அப்போது நான் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி அலைந்து கொண்டிருந்தபோது ஏதோ தொடர்பில் குக்கூ இயக்கத்தை சார்ந்த முத்து எனும் நண்பர் மூலம் யானை டாக்டரை ஒரு இரவில் வாசிக்க நேர்ந்தது. நான் வைத்திருந்த எல்லாவித நம்பிக்கைகளையும் உடைத்தெறிந்தது. என்னால் கட்டுப்படுத்த முடியாத அழுகை. வெறும் பொருள் சார்ந்த நம்பிக்கை தகர்ந்து அறம் சார்ந்த நல்லுணர்வை நான் அக்கணம் உணர்ந்தேன். உங்களை நன்றியோடு அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன்.



சிவகுருநாதன்,

சென்னை.

Saturday, December 13, 2014

அன்பின் வழியே நீடிக்கும் இந்த வாழ்க்கை- "யானை டாக்டர்



குழந்தைகள் தங்களுக்கு  கிடைத்த பிரியமான பரிசு பொருளை தங்களுடனே வைத்து கொள்வர் ,தூக்கத்திலும் விட்டு பிரிய மறுத்து  அதனை கட்டி பிடித்து தான் உறங்கி போவர்கள்.கட்டிலின் அடியில் விழுந்து காணமல் போன அந்த பரிசினை மீண்டும் அந்த குழந்தை கண்டுகொள்ளும் போது அடையும் ஆச்சரியமும் மகிழ்வும் தான் இன்று எங்களின் மனநிலையும்.

மீண்டும் ஒரு முறை யானை டாக்டர் கதையினை மக்களிடம் கொண்டு செல்லும் ஒரு முயற்சி இது...

அப்படி என்ன இருக்கிறது இந்த கதையில்?

கதையினை வாசித்த அத்தனை நண்பர்களின் மனதிலும் புழுவும்,யானையும் நிச்சயம் வருடி கொண்டு இருக்கும்.  

டாக்டர்.கே போல தனது வாழ்வின் ஒரு நொடியினையாவது மற்ற உயிர்க்கு அர்பணிக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சியம் எழும்.  

ஆதியில் இயற்கையின் அத்துணை அம்சங்களுடன்  இணைந்து  வாழ்ந்த மனிதனின் வாழ்வு  எதனுடனும் வேறு படவில்லை.அவனுக்கு எறும்பும் யானையும்,தவளையும் சிங்கமும் அனைத்தும் உயிர்கள் தான்.மனித உயிர்  தான்  என்ற பெரியது என்ற எண்ணம் நிச்சயம் இருந்திருக்க முடியாது  அந்த மனிதனின் கால்கள் இந்த மண்ணின் ஈரத்தையும் கோடி கணக்கான பூச்சிகளையும்,தாவரங்களையும்  நிச்சயம் உணர்ந்து இருந்திருக்கும்.  

      உங்களின் இந்த படைப்பின் மூலம் நீங்கள்  பல மக்களின் மனதுக்கு மிக நெருக்கமானவராக மாறி உள்ளீர்கள்  .உங்களுக்கு  வந்து குவிந்த கடிதங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் தான் இதற்கு சாட்சி.

கண்டிப்பாக மனித மனத்தின் ஆழங்களை சென்று அடையும் இந்த கதை .

புழுவினை பற்றிய இந்த 10 வரிகள் போதும் ,

’புழுக்களைப்பாத்து பயந்துட்டேள் என்ன?’ என்றார் டாக்டர் கே. ’புழுக்களை பாத்தாலே பெரும்பாலானவங்களுக்கு பயம்… அந்த பயம் எதுக்காகன்னு எப்பவாவது கவனிச்சா அதை தாண்டி போயிடலாம். பயத்தையும் அருவருப்பையும் சந்தேகத்தையும் திரும்பி நின்னு கவனிச்சா போரும், அப்டியே உதுந்துடும். ..

குண்டுக்குண்டாக மென்மையாக புசுபுசுவென்று ஆவேசமாகத் தின்றுகொண்டு நெளிந்துகொண்டிருக்கும் புழுக்களில் தெரியும் உயிரின் ஆவேசத்தை பார்த்துக்கொண்டிருக்கும்போது மனம் மலைப்புறும். வெண்ணிறமான தழல்துளிகளா அவை? அறியமுடியாத மகத்துவம் ஒன்றால் அணுவிடை வெளி மிச்சமில்லாமல் நிறைக்கப்பட்டது இப்பிரபஞ்சம் என்று அப்போது தோன்றி புல்லரித்துவிடும். உண் என்ற ஒற்றை ஆணை மட்டுமே கொண்ட உயிர். அந்த துளிக்கு உள்ளே இருக்கின்றன சிறகுகள், முட்டைகள். ஒவ்வொரு கணமும் உருவாகும் ஆபத்துக்களை வென்று மேலெழுந்து அழியாமல் வாழும் கற்பனைக்கெட்டாத கூட்டுப்பிரக்ஞை"

பூச்சிகளைப்பற்றியும்  அதனுடனான  மனித மோதல்களைப் பற்றியும் யானை டாக்டர் பேசும் போது  நம்மாழ்வார் அய்யா ஆன்மா தான் உள்ளே புகுந்தது போல் தோன்றும்...
 யானை டாக்டர் கதையினை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டியது மிக அவசியம்  என்ற அய்யாவின்  வார்த்தைகள்  வழியாகவும் இந்த பணியினை முன்னெடுக்கிறோம் .

காட்டு யானையின் உலகமும் அது மனிதனின் மிக மோசமான செயல்களினால் பாதிக்கப்படும் விதங்களும் மேலும் கோவில் யானைகளின்  சலிப்பூட்ட கூடிய அனுதின வாழ்கையும் நாம் என்றும் உணர்ந்திருக்க மாட்டோம்.

"யானை டாக்டர்" கிருஷ்ண மூர்த்தி  அவரின் எளிய உருவமும் இந்த கதையாடலின் மூலமாக விவரிக்கப்படும் அவரின் பேச்சும் செயல் பாடுகளும் நம்மை நிச்சயம் ஒரு லட்சிய பாதையினை நோக்கி கூட்டி செல்லும்.அவரினை போன்ற அற்புத ஆன்மாவை  நமக்கு உன்னத கதையின் வழியின் மூலம் அறிமுகபடுத்திய ஜெயமோகன் அவர்களுக்கு  நன்றி ..

அதிகாரத்தாலும், எதை குறித்தும் அக்கறையற்ற  மனநிலையாலும் நிரம்பி வழியும் நம் மனதினை நிச்சயம் ஒரு சுதந்திர வாழ்வுக்காக ஏங்கும் நம் மன  நிலையை இந்த உண்மை கதை உருவாக்கும் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும்  இல்லை.  

அன்புடன் ,
ஸ்டாலின் ,
குக்கூ குழந்தைகள் வெளி .

Friday, November 28, 2014

தாயார் பாதமும் அறமும்

 அன்புள்ள ஜெயமோகன் சார்,

       சமீபத்தில் தங்கள் அறம் சிறுகதை தொகுப்பு வாசித்தேன். எல்லா கதைகளும் மனதை நெகிழச்செய்தன.அழுதுகொண்டும் சிரித்துக்கொண்டும் படித்தேன். அதில் பலமுறை வாசித்த கதை தாயார் பாதம். அந்த தொகுப்பிலேயே என்னை  மிகவும் ஈர்த்த கதை அதுதான் என நினைக்கிறேன்.  It was not a straightforward story, but how can it be anything else? ராமனின் கதாபாத்திரம் அவ்வளவு gentle, hesitant, அவன் சுமந்த வடுக்கள் அவ்வளவு ஆழமாக பதிந்தவை, வேறெப்படி இருக்க முடியும்? இக்கதையை பற்றி ஒரு அடிப்படையான சந்தேகம் உள்ளது. அதை முடிந்தவரை சுருக்கமாக  கேட்கிரேன்.

       சீதையின் கதாபாத்திரம் எனக்கு ரொம்ப பிடிக்கும். குமரி அம்மன் தாணுமாலயானை கல்யாணம் செய்ய பாதத்தை தூக்கினாள் என்றால் சீதை ராமனுடனே சேர்ந்து இருக்க பாதத்தை தூக்கினாள் . ராவணனை எதிர்த்து பாதம் தூக்கினாள். ராமன் இல்லாமல் இரு குழந்தைகளை ஒற்றை காலில் நின்று வளர்த்தாள். அப்போதும் சந்தேகம் வந்த போது தான் காலை கீழே வைத்தாள், அப்படியே பூமியினுள்ளே சென்றாள். இதில் அபாரமானது அவள் காலை தூக்கியது அல்ல, அவள் எல்லாச்செயல்களும் எப்போதுமே அன்பால் மட்டுமே தூண்டப்பட்டவையாக இருந்தன.

       கொஞ்ச நாள் முன்பு ஒழிமுறி திரைப்படம் பார்தேன். அதில் வரும் மீனாக்ஷி அம்மாள் இதே வார்த்தையை சொல்கிறாள் - அவள் விவாகரத்து கோருவது, காழ்ப்பினால், வன்மையால் அல்ல. அன்பினால் மட்டுமே. அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பழிக்கு பழி வாங்கவில்லை.  இது எப்படி முடியும் என்று தர்க்கரீதியாக எளிதில் புரியக்கூடிய ஒன்றாக எனக்கு தெரியவில்லை. அன்பின் வழி மட்டுமே புரிகிறது.சத்தியமாக இது கோழைத்தனமில்லை, in fact quite the opposite. இந்த குணத்திற்கு ஒரு பெயர் கூட புலப்படவில்லை எனக்கு. அப்படி ஒரு ineffable quality. இது அபாரமான ஒன்று. சந்தேகமே இல்லை.

       தாயார் பாதம் சரஸ்வதி பாட்டியும் (நான் அப்படி கூப்பிட்டு பழகிவிட்டேன் :)) இதே ரகம் தானே? சீதையின் புருஷன் முதலில் அரசன், that was his baggage. மீனாக்ஷி அம்மாளின் புருஷனுக்கு அவன் அம்மாவிடம் இருந்த பயம், அப்பாவின் கஷ்டம் பார்த்தது அவரது baggage. அவர்கள் மனைவிகளுக்கு இழைத்த அநீதிகளுக்கு மூல காரணம் இருந்தது (அவை excuses அல்ல என்பது என் கருத்து). ஆனால் சரஸ்வதி பாட்டியின் புருஷன் seems to have been simply indifferent. அவரை கூப்பிட்டு, "தாத்தா, பாட்டிக்கு தான் ஒரு பாட்டு பாடி நீங்க கேக்கணும்னு ஆசை" என்று சொல்லியிருந்தால் பேந்த பேந்த முழித்திருப்பார். அவர் பாட்டியின் அகத்தை  conceptualize பண்ணக்கூடியவரே அல்லர் என்று தோன்றுகிரது. சரியான 'அந்த காலத்து மனுஷர்'. அவள் மேல் மலம் கொட்ட வேண்டியதே இல்லை, அவ்வளவு வருடங்களாக வேரென்ன செய்தார்? அவளை தன மனைவியாக என்ன,  ஒரு மனுஷியாக கூட பொருட்படுத்தியதாக தெரியவில்லை. என்ன கொடுமை அது.

       அந்த காலத்தில், அந்த இடத்தில், விவாகரத்து என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று. அனால், மீனாக்ஷி அம்மாள் காலத்தில் (100 வருடங்கள் கழித்து?) அவள் தன் அகம் கருதி, தாணுபிள்ளையினிடம் கொண்ட தன் உறவின் நேர்மையை (integrity) கருதி  அவள் விவாகரத்து கேட்கிறாள். இந்த காலத்தில், என் தலைமுறையில், சில உறவுகள் தொடராமல் இருக்க இதுவே ஒரு முக்கிய காரணம். "என் சுயத்தை வளரவிடாதவனிடம் (வளிடம்) நான் இருந்தால் நான் எப்படி முழுமை அடைவேன்?" என்ற எண்ணம். மீனாக்ஷி அம்மாளின் முடிவை என் மனம் whistle அடித்து ஆமோதித்து, அவளில் துளிக்கூட காழ்ப்பிள்ளதது அவளை வாரி அணைக்க வேண்டும் போல இருந்தது. What a woman. ஆனால் ஒரு வேளை அவள் விவாகரத்து கோரவில்லை என்றால் காழ்ப்பில்லாமல் இருந்திருப்பாளா? அன்பெனும் வடிவாக இருந்திருப்பாளா? தெரியவில்லை.

       பாட்டி மிகுந்த மன வேதனையில் இறந்தாள். ஒரு OCD patient மாதிரி உணவைக்கூட மறந்து, கழுவு, கழுவு என்று அவள் சுயத்தின் மேல் படிந்த அழுக்கை கழுவுகிராளே! (Lady Macbeth comes to mind, ஆனால் அவளோ செய்த தவறை கழுவ முயற்சித்தாள். பாட்டி செய்யாத தவறுக்காக இழைக்கப்பட்ட மானபங்கத்தை விலக்க முயற்சிக்கிறாள்). பாட்டிக்கு முடிந்திருந்தால் விவாகரத்து வாங்கியிருப்பளா? தெரியவில்லை.

       என் கேள்வி என்னவென்றால், பாட்டியின் இந்த பொறுமை, இந்த தவம், இந்த ஒற்றை கால் தூக்கி நிற்கும் ineffable stance, இது அறம் ஆகுமா? அறம் என்பது என்றென்றும் நிலைத்து நிற்க்கும் ஒரு விழுமியம் என்று நான் புரிந்து கொள்கிரேன். சீதையோ மீனாக்ஷி அம்மளோ அன்பு, பொறுமை, வலிமை  நிறைந்தவர்கள். அந்த அன்பு நிறைந்த பொறுமையும் வலிமையையும்  பாட்டியிடமும் இருந்தது (அவள் சிறு வயதில் என்ன ஒரு equanimityயோடு பிறந்த ஊரை விட்டு வருகிராள்!). ஆனால் அந்த அன்பை கடைசி வரை அவள் தக்க வைத்து கொள்கிறாளா? அவள் புத்தி பேதலித்து சுயம் இழந்து அல்லவா சாகிறாள்? சீதை மற்றும் மீனாக்ஷி அம்மள் அகத்தை  பாதுகாத்து அன்பை காக்கிறார்கள். பாட்டியின் stance அவள் காலத்துக்கு வேண்டுமென்றால் சரியாக வந்திருக்கலாம், அது அறம் ஆகுமா? இதை பெண்ணியம் சார்ந்து நான் கேட்கவில்லை. ஒரு மனிதனின் சுயத்தை இன்னொரு மனிதன் மதிக்காத போது அதற்க்கு இது போன்ற பொறுமை, as a principle, பதில் ஆகுமா என்பதாக என் கேள்வியை எடுத்துக்கொள்ளலாம்.

       எனக்கு கதையில் அறம் என்று பட்டது  தாத்தாவின் இசையை ராமன் தன்னுணர்வற்ற நிராகரிப்பு செய்தது. என்ன ஒரு பண்பான மனிதன். எவ்வளவு sensitive. பாட்டி எதுவுமே சொல்லாமலேயே, அவள்  உள்ளுணர்வை, அகத்தை  புரிந்து கொண்டவன் அவன் தானே? வார்தைகளால் அல்ல, வார்த்தை மீறிய சங்கீதத்தில் அவன் தாத்தாவுக்கு  பதில் சொல்கிறான் - 'நீ வேண்டாம்! என் பாட்டியை உதாசீன படுத்திய உன் சங்கீதம் வேண்டாம்! என் விரலில் கூட ஞானம் இருக்கு, ஆனால் என் குரல் உன்னை நிராகரிக்கிறது.' ஒரு மனுஷியின்  இழிவுக்கு ராமனின் உடலில்  ஒவ்வுறு அணுவும்  கண்டனம் தெரிவிக்கின்றது போல் தோன்றுகிரது. அதுவே அறமாக எனக்கு பட்டது. ஆனால் அதில் ஒரு வித குரூரம் கூட இருக்கு, அது மட்டுமே என்னை சற்று சிந்திக்க வைக்கிறது.

       நேரம் கிடைக்கும்போது  தெளிவாக்குமாறு  கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி,
சுசித்ரா


அன்புள்ள சுசித்ரா

அறம் தொகுதியில் உள்ள கதைகளின் மையம் அறம் என்றால் இது என சுட்டிக்காட்டுவது அல்ல. அறம் சார்ந்த ஓர் அக எழுச்சியில் இருந்து அக்கதைகள் அனைத்தும் தொடங்குகின்றன, அவ்வளவுதான்.

பலசமயம் அறத்தின் முகங்களை சுட்டிக்காட்டுகின்றன. சிலசமயம் அறம் திகைத்து நிற்கும் இடங்களை. அறம் என்றால் என்ன என்றல்ல அறம் எப்படி வாழ்வில் செயல்படுகிறது என்றே அக்கதைகள் வினவிக்கொள்கின்றன.

அக்கதைகளை நானும் ஒரு வாசகனாகவே இப்போது வாசிக்கமுடியும். என் எல்லா படைப்புகளையும்போலவே அவையும் தெளிவாக யோசித்து வகுத்து எழுதப்பட்ட கதைகள் அல்ல. எழுதுவதன் மூலம் சென்றடைந்த சில தருணங்கள், அவ்வளவுதான்

தாயார்பாதம் கதையை நான் இப்படிப் புரிந்துகொள்கிறேன். நீண்ட நெடுங்காலமாக நம் மரபில் வன்முறையற்ற ஓர் எதிர்ப்புமுறை உள்ளது. எதிர்க்கப்படுவதன் முன் உறுதியாக தன் எதிர்ப்பை வெளிப்படுத்தி அதற்கான அனைத்து துயர்களையும் மௌனமாக ஏற்றுக்கொள்வது அது.

வல்லமை வாய்ந்த ஒருவனை எந்த ஆற்றலும் இல்லாத ஒருவன் எதிர்க்கும் வழி அது. அரசாங்கத்தை, சமூகத்தை, மதத்தை எளிய தனிமனிதன் எதிர்க்கும் வழி. அவனிடம் உள்ள இறுதி ஆயுதம் அவன் உடல், உயிர்

அது சமண முனிவர்களின் வழிமுறையாக இருந்தது. பிழை செய்தவனின் கண்முன் உண்ணாவிரதமிருந்து உயிர்விட்டார்கள் அவர்கள். அதை தோல்வி என்றோ வீழ்ச்சி என்றோ சொல்லமுடியுமா என்ன? அதில் வன்முறை இல்லை, வன்மம் கூட இல்லை. ஓர் உறுதிதான் உள்ளது.

இது பிழை இதை ஏற்பதை விட நான் இறப்பேன் என்பது ஒரு பெரிய அறிவிப்பு. ஒருவன் தன் இறப்பால் அதன் கீழெ அடிக்கோடிடுவான் என்றால் அது மிகப்பெரிய ஆயுதம்

அதில் இருந்தே காந்தி சத்யாக்ரகம் என்னும் போராடத்தை கண்டுகொண்டார். நவீன உலகுக்கு அதை அளித்தார். வன்முறையற்ற போராட்டம். வன்முறையை வெல்லும் கருவி

பாட்டி செய்தது அதுவே. மீனாட்சி அம்மாளுக்கோ இன்றைய பெண்களுக்கோ இருக்கும் வாய்ப்பு அவளுக்கு இல்லை. அவள் சிறையுண்டவள் , கட்டுண்டவள். ஆகவே அவளுக்கிருந்தது தன்னை முழுமையாக ஒடுக்கிக்கொள்வது. அவள் பாடவேயில்லை. தன்னை வெறுமொரு உடலாக ஆக்கிக் கொண்டாள். அந்த உடல் ஓர் அறிவிப்பாக அந்த வீட்டில் உயிருடன் இருந்துகொண்டே இருந்தது.

அதன் உச்சமே அவள் மனப்பிறழ்வு. அவள் அடையும் முடிவு. அந்தக்கதை அந்தத் தரப்பை மட்டும் வலுவாகச் சொல்லிச் செல்லும்போது அந்த ஆயுதத்தால் தாக்கப்பட்ட அந்த தாத்தாவின் தரப்பை ஊகத்துக்கே விட்டுவிடுகிறது. தன் இல்லத்தில் இப்படி ஒரு மூர்க்கமான எதிர்ப்பை சந்தித்தபடி அவர் வாழ்ந்திருக்கிறார்.  ஒன்றுமே செய்யமுடியாத வைரம் போன்ற அமைதியை.

அவர் எச்சிலை எடுத்துக் கொட்டினார். அவள் எஞ்சிய வாழ்நாளெல்லாம் மௌனத்தை திரும்ப அவர்மேல் கொட்டிக்கொண்டே இருந்தாள்.ஓர் உக்கிரமான சாபவாக்கியம் போல அவள் அவர் முன் தன்னை வைத்துக்கொண்டாள்.

மீனாட்சியம்மாளிடம் இருந்தது கருணை. அவளிடம் சினம் இல்லை. அதே கருணைதான் பாட்டியிடமும். ஆனால் ஆழ்மான ஒரு சினம் இருந்தது அவளுக்குள். அவள் ஒரு பாதத்தையே தூக்க முடியும். ஏனென்றால் அவள் அன்னை.


அவள் இறந்தபின்னரும் தலைமுறை தலைமுறையாக நீடிக்கிறது அவளுடைய எதிர்தாக்குதல். ராமனின் காலம் வரை. அவருக்குப்பின்னரும் கூட. அவர் இறந்தபின்னும் அந்தக் கடனை அடைத்துக்கொண்டே இருக்கவேண்டும். மிகப்பெரிய தண்டனை. நின்று கொல்லும் அறத்தின் வடிவம்தான் அவள்


அத்தகைய பல கதைகள் நம் மரபில் சென்றகாலத்தில் உள்ளன. பெரும்பாலான நாட்டுப்புறப் பெண்தெய்வங்கள் அத்தகையவைதான். நம் குடும்பங்களில் எல்லாம் அத்தகைய கதைகள் உண்டு.

பிரபஞ்சன் ஒரு கதை சொன்னார். அவரது குடும்பத்தில் கள்ளுக்கடைகள் நடத்திவந்த ஒரு பாட்டார் தன் நான்காவது இளம் மனைவியை திரண்டி வால் சவுக்கால் அடித்தார். உடம்பெல்லாம் குருதியுடன் கிடந்த அந்த சிறுமி பழிவாங்கினாள். எஞ்சிய வாழ்நாள் முழுக்க அவள் ஒரு சொல்லும் பேசவில்லை.

ஜெ


<a href="http://aramstories.blogspot.in/">அறம் அனைத்து விவாதங்களும் </a>

Thursday, November 27, 2014

அறம் தீண்டும் கரங்கள்


ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.

கடந்த கும்பமேளாவிற்கு கிளம்பும் முன் என்னிடம் இருந்த புத்தகங்கள் அனைத்தையும் மூன்று டிராவல் பேக்குகளில் அடைத்து எனது நெருங்கிய நண்பனுக்கு அவன் வீட்டில் சென்று அளித்துவிட்டு கிளம்பினேன். தனியாக கிளம்பினேன் எந்த முன் பயண திட்டமும் இல்லாமல். இரண்டு மாத திட்டம் திரும்பிவர மூன்று மாதங்களானது. நண்பன் அதிகம் வாசிப்பு பழக்கம் இல்லாதவன். தங்கள் தளத்தைப் பற்றியும் எழுத்துக்களைப் பற்றியும் அதிகம் பேசுவேன். நான் அளித்த புத்தகங்களில்  உங்களின் புத்தகங்கள் நாவல்கள் அனைத்தும் இருந்தது. அவன் வீட்டில் அலமாறியில் அடைத்து ஆங்காங்கே வைத்து இடம் மாற்றிக் கொண்டிருந்தார்களே தவிர ஏதும் எடுத்து படிக்கவில்லை என்று தெரிந்தது. வீட்டை சீரமைப்பு செய்து அதை ஓரிடத்தில் அடுக்கி வைத்து கண்ணில் தெரியுமாறு செய்தபின் அவர்களாகவே எடுத்து வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அறம் தொகுப்பு படித்து ஓர் நாள் அவன் வந்து புலம்பியது நன்றாகவே நினைவிருக்கிறது. அவனது மனைவிக்கு சோற்றுக்கணக்கு, நூறு நாற்காலிகள் மிகவும் பிடித்திருந்து சொன்னதாக சொன்னான். அவனுக்கு மயில் கழுத்து தவிர அனைத்தையும் பற்றி கூறினான்.



அவனது மகன் 9வது மெட்ரிகுலேசன் படிக்கிறான். அவன் அவ்வப்போது சில புத்தகங்களை விரித்து வைத்து அமர்ந்திருப்பதை அவ்வளவாக இவர்கள் கண்டுகொண்டதில்லை. அவனது பள்ளியில் புத்தக வாசிப்பிற்கு சமீபத்தில் தேர்வு நடத்தியிருக்கிறார்கள். மாணவர்கள் படித்த பிடித்தமான புத்தகத்தைப் பற்றி சொல்ல வேண்டும். ஏதாவது ஒன்றைப் பற்றி. பெரும்பாலோனோர் அவனது வகுப்பில் அனைவரும் ஆங்கில கதைபுத்தகத்திலிருந்து தான் படித்ததை சொன்னதாக கூறினான். இவனது மகன் அறம் தொகுப்பிலிருந்த “சோற்றுக்கணக்கு” கதையை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் அது தனக்கு எப்படி இருந்தது என்று விமர்சனமாகவும் எழுதிக் கொண்டிருந்தானாம். அதை என் நண்பன் படம்பிடித்து எனக்கு வாட்ஸப்பில் பகிர்ந்து மகிழ்ந்தான். ( அதை இத்துடன் இணைத்துள்ளேன் உங்கள் பார்வைக்கு )

அவனது மகன் எழுதியதை படிக்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அறம் சென்று சேரும் கரங்களை உங்களுக்கு வரும் வாசகர் கடிதங்களின் வழியே பார்த்து வியந்திருக்கிறேன். இங்கே ஒரு இளம் கரங்களில் சென்று அவனது மனதையும் நெகிழச் செய்யும் என்று எதிர்பார்த்ததில்லை. அற்புதமான ஆக்கம் அளித்தமைக்கு நன்றி.

புத்தகங்கள் என்றும் வீணாவதில்லை.

பிரேம்குமார்
மதுரை

Monday, September 29, 2014

ஓலைச்சிலுவை- கேசவமணி

டாக்டர் சாமர்வெல் இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட்மோர் லேண்டில், கெண்டால் என்ற ஊரில் பிறக்கிறார். ஷேக்ஸ்பியர் மீது காதல் கொண்ட இவர் இராணுவத்தில் பணியாற்றி முதல் உலகப்போரில் பங்கெடுக்கிறார். போரின் பயங்கரம் அவரை அமைதியை நாடச்செய்கிறது. தனது நண்பர்களுடன் மலையேற்றம் செய்யும் போது, நண்பர்கள் அனைவரும் பனிமலை பெயர்ந்து விழுந்துவிட, தான் எடுத்த முடிவால் இவ்வாறு ஆயிற்றே என்று வருந்துகிறார். இந்தியாவில் பல இடங்களில் பயணம் செய்து, நெய்யூர் வந்தவர் அங்கிருந்த மருத்துவமனையின் நிலைமை அறிந்து, லண்டனில் தனக்கிருந்த பிரகாசமான வாய்ப்பை உதறிவிட்டு, அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடுகிறார். அவர் வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிடுகிறது. அங்கிருந்த சாதாரண மக்களுக்காக அவர் ஆற்றிய பணியைச் சொல்வதே ஜெயமோகனின் ஓலைச்சிலுவை.

ஒரு மனிதன் இறந்துபோகிறான். அவனை மதம் மாற்றித்தான் அடக்கம் செய்வோம் என்று பாதிரியார் சொல்லும்போது அவர் மீது எரிச்சலும் கோபமும் வருகிறது. மனிதனின் இயலாமையை இப்படிப் பயன்படுத்திக் கொள்வது எவ்வளவு பெரிய கயமைத்தனம் என்று தோன்றுகிறது. செத்தவருக்கு இப்படியெனில், உயிரோடு இருப்பவருக்கு உணவு, படிப்பு, வேலை கிடைக்கும் என்று சொல்வது கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. காலங்காலமாக விதைக்கப்பட்டு வளர்ந்திருக்கும் ஒரு நம்பிக்கையைச் சிதைத்து, வசதிகளைச் செய்துகொடுத்து, மதமாற்றம் என்ற பெயரால் அவர்களைப் பயன்படுத்திக் கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. 

கடவுள் மீது வைக்கும் நம்பிக்கை எல்லா செயல்களிலும் நமக்கு வெற்றியைப் பெற்றுத் தருவதில்லை. இருந்தும் ஒவ்வொரு செயலிலும் கடவுள் மீது நம்பிக்கை வைக்கிறோம். ஒவ்வொரு நம்பிக்கையும் பொய்த்துவிட அடுத்தடுத்து மழைக் காளான்களாக நம்பிக்கைகள் பிறந்து கொண்டேதான் இருக்கின்றன. அதற்காக இதுவரை இருந்த கடவுளை தூக்கி எறிந்துவிட முடியுமா என்ன? “அப்பனையும் அம்மையையும் காட்டிலும் சாமிகளக் கண்டு வளர்ந்தவளாக்கும். வேண்டாம் சாயிப்பே. சாயிப்பு என் மேலே எரக்கப்பட்டுக் கேட்டதுக்குண்டான கடனை நான் அடுத்த சென்மத்திலே அடைக்குதேன். நானும் என் பிள்ளையளும் கஞ்சியில்லாமல் சாகணுமின்னு அந்த தெய்வங்க நினைச்சா அப்படி நடக்கட்டு” என்று சிறுவனின் அம்மா, இறந்துபோன தன் கணவனை விட்டுச் செல்லுவது நமக்கு நியாயமாகவே படுகிறது.

அந்த வீட்டின் குடும்பச் சூழல், வறுமையின் கொடுமை இவையெல்லாம் மதமாற்றத்திற்குச் சரியான காரணமாக நாம் சமாதானம் அடையாத போது, கதையின் இந்தப் பகுதி வருகிறது: “நான் கொஞ்சம் தூக்க மயக்கத்தில் ஆழந்தபோது கடைக்குட்டி தங்கம்மை எழுந்து என்னவோ சொன்னாள். நான் எழுந்து பார்த்தேன். அவள் தூக்கத்தில்தான் இருந்தாள். ஆனால் சிணுங்கிக் கொண்டு மழுங்கலாக ஏதோ சொன்னபடி கையால் எதையோ செய்வது தெரிந்தது. கண்கள் சிலகணங்களில் தெளிந்தபோது அவள் என்ன செய்கிறாள் என்று கண்டேன். அவள் எதையோ அள்ளி அள்ளித் தின்றுகொண்டிருந்தாள். சப்புக்கொட்டியபடி மென்றாள். கையை நக்கினாள். திடீரென்று விழித்துக்கொண்டவள் போல என்னைப் பார்த்து வாயை மட்டும் அசைத்தாள். ‘அண்ணா’ என்றாள். ‘உறங்குடீ’ என்றேன் அதட்டலாக. புன்னகையுடன் ‘கஞ்சி இருக்கு’ என்றாள்.”

இந்தக் காட்சி நம்மை வெகுவாக உலுக்கிவிடுகிறது. மதம் என்பது பற்றியோ அதன் மாற்றம் என்பது பற்றியோ பேசுவதற்கும் எழுதுவதற்கும் எளிதாகவே இருக்கும். ஆனால் நிதர்சனம், அதுவும் கனவில் வெளிப்படும் நிதர்சனம், மிகவும் கொடியது. அதை இல்லாமையின் பிடியில் சிக்கித் தவிப்பவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். தூரத்தில் சௌகரியமான இடத்தில் அமர்ந்துகொண்டு, எதையும் சொல்லலாம். ஆனால் நிஜம் பயங்கரமானது. அந்த பயங்கரத்தை, அச்சத்தை நீக்குபவர் யாராக இருப்பினும் அவரிடம் தஞ்சம் புகுவது உயிரின் இயல்புதானே? அதையே கதைசொல்லியின் குடும்பம் செய்கிறது. அவன் ஜேம்ஸ் டேனியல் ஆகிறான். இருந்தும் வளர்ந்து விருட்சமாய் நிற்கும் ஒரு நம்பிக்கையை முற்றிலுமாக வெட்டிச் சாய்ப்பது அவ்வளவு எளிதல்ல. ஆகவே ஒட்டுதலும் பற்றுதலும் ஏற்படுவது சிரமம்தான். அதற்காக சுயநலத்தின் பொருட்டு எல்லாவற்றையும் பயன்படுத்திக் கொண்டுவிட்டு விசுவாசமாக இல்லையென்றால் அது தவறல்லவா? அதற்கு என்னசெய்வது? அதற்குச் செய்வதற்கு ஏதுமில்லை, அந்தத் தருணத்திற்காகக் காத்திருத்திருப்பதைத் தவிர.

கிராமத்தில் காலரா பரவுகிறது. காலராவுக்குக் காரணம் கிளாத்தி மீன்தான் என்பதை கண்டறியும் சாமர்வெல் குடில்களின் முற்றங்களிலும் வீட்டு வாசல்களிலும் நின்று, “அய்யாமாரே அம்மாமாரே வெள்ளேக்காரசாமி கிறிஸ்து பேராலே சொல்லுது, கிளாத்தி சாப்பிடாதீங்கோ.... அய்யாமாரே அம்மாமாரே வெள்ளேக்காரசாமி உங்களேக் கையெடுத்துக் கும்புடுது... கிளாத்தி சாப்பிடாதீங்கோ” என்று மன்றாடுவது நம் உள்ளத்தில் சம்மட்டி கொண்டு அடிக்கிறது. மருத்துவம் ஒரு சேவை என்பதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்? மருத்துவத்தை தொழில் எனக்கருதும் இந்த நூற்றாண்டு மனிதர்கள் நாம். சாமர்வெல் காலராவில் இறந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்துவதில் அல்லும் பகலும் அயராது பாடுபடுகிறார். மருத்துவத்தைவிட நோய் வராமல் தடுப்பது மருத்துவர்களின் முக்கிய வேலை என்பதை இன்றய மருத்துவர்கள் யாரும் லவேசமும் எண்ணிப் பார்ப்பதில்லை.

கையில் விளக்குடனும், மணியுடனும் கிராமங்களுக்குச் சென்று சந்துகள், குடுசை வீடுகள் என்று அலைவதும், பிணங்களைத் தேடி புதர்களிலும், ஓடைகளிலும் அலைந்து திரிந்து சாமர்வெல் ஆற்றும் காரியங்கள் வேறு எவரும் செய்ய முடியாதவை. மருத்துவர் என்பதன் முழுத் தகுதியும் அவருக்கே உரித்தானது. அவருடன் சேர்ந்து அலையும் டேனியல் சோர்ந்து போகிறான். காரணம் அவனுக்கு சேவை என்பதன் முழுப்பொருளும் இன்னும் அர்த்தமாகவில்லை என்பதோடு, கிறுஸ்துவோடு அவன் ஒட்டாமல் இருப்பதும் அவனை முழுமையாகச் செயல்படாமல் தடுக்கிறது. இந்நிலையில், தனது குழந்தை இறந்தவிட்டதாகக் கதறி அழும் பெண்ணிடம் குருவாயூரப்பன் படத்தை அவள் கையில் கொடுத்து, “இந்தா இருக்கு உன் குழந்தை. இனி இதாக்கும் உன் குழந்தை..” என்று சாமர்வெல் சொல்லுமிடத்தில் அவன் அடிபட்டவன் போலாகிறான். எல்லா மனிதர்களுக்கும் ஒரு உருகுநிலை இருக்கிறது. அந்தச் சந்தர்ப்பத்தில் அவன் அந்த உருகுநிலையின் உச்சத்தை எட்டுகிறான். உறங்கிக்கிடந்த அவன் ஆன்மா விழிக்கிறது.

அங்கிருந்து தள்ளாடியபடி செல்லும் அவன் தன் முன்னால் செல்லும் சாமர்வெல்லைப் பார்க்கிறான். எங்கிருந்து வந்தார் இந்த டாக்டர் தியோடர் ஹேவர்ட் சாமர்வெல்? இந்தியாவில், தமிழ்நாட்டில் ஊர்பேர் தெரியாத கடைக்கோடி கிராமத்தில் அவருக்கு என்ன வேலை? ஒரு பிச்சைக்காரனைப் போல வீடுவீடாகச் சென்று கூவுவதும், பிணங்களை அப்புறப்படுத்துவதும்தான் அவரின் பணியா? மனித வாழ்க்கையில் ஏதோ ஒன்று நம்மைப் புலப்படாத பாதையில் அழைத்துச் சென்று, ஆற்றவேண்டிய பணியை நமக்கு உணர்த்திச் செல்கிறது. ஆனால் அதை செவிமடுப்பவர்கள் எத்தனை பேர்? பலரும் தங்களின் சௌகரியம் கருதியே காரியங்களைத் தேர்ந்தெடுக்கும் போது, தன்னுடைய நலத்தைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் யாரோ ஒரு மூன்று வயது பெண் குழுந்தை கொடுத்த ஓலைச்சிலுவையை கடவுளின் ஆக்கினையாகக் கொண்டு உழைக்கிறாரே இந்த மனிதர்? இவர் ஆற்றும் இந்த சேவை, அர்ப்பணிப்பு உணர்வு இவற்றுக்கு என்ன பொருள்? இது வெறும் உருவம் சம்பந்தப்பட்டதா? உருவமில்லாத ஒன்றல்லவா அது? அது எதுவாகத்தான் இருந்தால் என்ன? அதற்குப் பெயர் என்னவானால்தான் என்ன? அந்நேரத்தில், அவனது அந்தப் பார்வையில், அவனுள்ளே ஓடும் எண்ணங்கள் இதுவன்றி வேறு என்னவாக இருக்கும்?


அப்போது அவனெதிரே உருவம் ஒன்று, வெண்ணிற அங்கியில், ஓலைச்சிலுவையை அவனிடம் கொடுத்து மறைகிறது. இறைவனை நோக்கி நாம் ஒரு அடி வைத்தால் இறைவன் நம்மை நோக்கி இரண்டு அடிகள் வைக்கிறான். நமது மனம் பக்குவப்படும் போது இறைவன் காட்சியளிக்கத் தயக்கம் காட்டுவதில்லை. ஏசுவைப் பலர்கூடிச் சிலுவையில் அறைந்தார்கள், சாமர்வெல் தன்னைத்தானே ஓலைச்சிலுவையில் அறைந்துகொண்டார் என்பதை உணர்ந்த அந்தக் கணத்தில் ஜேம்ஸ் டேனியல் தன்னையும் அதே ஓலைச்சிலுவையில் அறைந்துகொள்ளத் தயாராகிவிட்டான். தூரத்தில் சென்று கொண்டிருக்கும் அவரை எட்டிப்பிடிப்பதில் இனி அவனுக்கு சிரமம் ஏதுமிருக்காது, ஏனெனில் மேய்ப்பர்கள் எல்லோரும் இடைச்சாதி என்பதை அவன் புரிந்துகொண்டுவிட்டான்.

http://kesavamanitp.blogspot.in/2014/09/blog-post_29.html

Saturday, September 20, 2014

நூறுநாற்காலிகளின் யதார்த்தம்

 அன்புள்ள ஜெயமோகன் ,

வணக்கம்,

சென்ற வாரம் தான் நூறு நாற்காலிகள் கதையை உங்கள் தளத்தில் படித்தேன். மனதில் கொப்பளிக்கும் உணர்வுகளை சொல்லவே முடியவில்லை, மிகவும் கனமாக உணர்கிறேன். கடந்த ஒரு வாரமாக கடுமையான பணிச்சூழலுக்கு நடுவேயும் அந்த கதை மனதில் ஓடிக்கொண்டே இருந்தது, அதன்பிறகு எதனையும் வாசிக்க முடியவில்லை.

நான் பிறந்து வளர்ந்த தலித்துகள் அதிகம் வாழும் சூழலில் ஆதிக்க சாதி அடக்குமுறைகளையெல்லாம் நான் பார்த்ததே இல்லை, (கூட்டமாக இருப்பவர்களே ஆதிக்க சாதி இந்த காலத்தில்) இத்தனை கொடுமைகள் மனிதர்களுக்கு நிகழ்ந்திருக்கக் கூடும் என்பதை யோசித்தது கூட இல்லை.

காப்பான் நாற்காலியில் உட்காரும்பொழுது அவர் தாயின் உடல் பதறி நடுங்கியதைப் போல என் கை கால்கள் எல்லாம் நடுங்கின, அந்த தாயின் மனதில் எத்தனை தலைமுறைகளாக இந்த பயம் விதைக்கப்பட்டிருக்கும். ஒரு மனிதன் சக மனிதனுக்கு செய்யக்கூடிய அதிகபட்ச கொடுமையாகவே இதைக் கருதுகிறேன். இந்த சாதிக்கொடுமைகளை நிகழ்த்திய ஒரு சமூகத்தின் வழிவந்தவனாதலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மனிதரிடமும் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

நான் மனிதன் என்ற பிரக்ஞையே உருவாகமால் எத்தனை மனிதர்கள் இதுபோல கொடுமைகளை அனுபவித்து மாண்டிருப்பார்கள்? இதற்கு மேலாகவாவது இந்தக் கொடுமைகள் ஒழியுமா என்று பார்த்தால் இல்லை என்றே தோன்றுகிறது. சாதியை ஒழிக்கிறோம் என்று தவறான அரசியல்வாதிகளின் பின்னால் சென்று கொஞ்ச நஞ்சம் சமத்துவமாக இருப்பவர்களையும் இவர்கள் பின்னுக்கே இழுக்க நினைக்கிறார்கள்.

இலக்கியம் ஒருவனுக்கு அளிப்பது எதை என்று நீங்கள் எழுதியிருந்தது நினைவில் ஓடிக்கொண்டே இருந்தது, இலக்கியம் அளிப்பது வாழ்வனுபவத்தை. இந்த சிறுகதை இல்லையென்றால் நான் காப்பானாக வாழ்ந்து அவர் அடைந்த துயரங்களை அறிந்துருக்கவே முடியாது. ஒரு நடுத்தர குடும்பத்து மூத்த மகனின் அனுபவங்களை மட்டுமே நான் அறிந்திருக்கக்கூடும்.

இட ஒதுக்கீடு ஏன் தேவை என்று நான் என் அனுபவத்தை மட்டும் வைத்து யோசித்துக் கொண்டிருந்தேன், நான் பார்த்த இட ஒதுக்கீடு பெறும் நபர்கள் எல்லோரும் மூன்றாம் தலைமுறையாக இட ஒதுக்கீடு பெற்றவர்கள், எங்கள் குடும்பத்தை விட பணக்காரர்கள், அதனாலேயே இந்த இட ஒதுக்கீட்டு முறையின் மேல் எனக்கு வெறுப்பு அதிகம். ஆனால் இப்பொழுது உள்ள மனநிலையில் அந்த நிலைப்பாடு நொறுங்கி விட்டது.

நெல்லுக்கு இரைக்கும் நீர் புல்லுக்கும் புசிந்துதான் ஆகும், இன்னும் எஞ்சியிருக்கும் நெல்லுக்காக இட ஒதுக்கீடு இருந்து தான் ஆகவேண்டும்.


நன்றி

--இப்படிக்கு
    விக்னேஷ்.M.S



அன்புள்ள விக்னேஷ்

அறம் கதைகளும் சரி ஏழாம் உலகம் போன்ற நாவல்களும் சரி நாம் காணாமல் விட்டுவிடுகின்ற யதார்த்தங்களைச் சொல்லக்கூடியவை. அவற்றை நாம் அறிவோம், அறிந்ததை நமக்குநாமேகூடச் சொல்லிக்கொள்ள மாட்டோம். இலக்கியத்தின் பணி அறியவைப்பது. அதன் வழியாக நம் நீதியுணர்ச்சியை தீட்டுவது

நீதியுணர்ச்சியின் மறுபக்கம் அமர்ந்திருப்பது சுயநலம். ஆகவே நீதியுணர்ச்சி ஒவ்வொரு கணமும் மழுங்கிக்கொண்டிருக்கிறது. ஆகவே அதை மீளமீள தீட்டியாகவேண்டும். இலக்கியங்கள் செய்வது அதையே

சமீபத்தில் சில அனுபவங்கள் வழியாக நூறுநாற்காலிகளின் உலகம் இன்னும் தீவிரமாக அப்படியே நீடிப்பதைத்தான் உணர்ந்தேன். நாம் வசதியாக அதன் மேல் நம் அறியாமையை போர்த்திக்கொள்கிறோம்

ஜெ

Monday, September 1, 2014

சுந்தர வடிவேலன்,சுசீலா

ஜெ,
அப்படியே அமர்ந்து கொண்டு சோற்றை உருட்டினேன். அதை வாயில் வைக்கும்போது அதட்டலுக்காக காதும் உதைக்காக முதுகும் துடித்துக் காத்திருந்தன. முதல் கவளத்தை உண்டு விட்டு ஏனென்று தெரியாமல் எழப்போனேன்”
அதட்டியும் உதைத்துமே ஒரு பெரும் சமுகத்தை பல நுற்றாண்டுகள் அடிமைப் படுத்தி வைத்திருந்திருக்கிறோம் . குற்றவாளிக் கூண்டில் எல்லாருக்கும் இடம் உண்டு. குற்ற உணர்வும் சரிதான் சில நேரம்.
“ஒரு மகத்தான வனமிருகத்தால் மிச்சமின்றி உண்ணப்பட்டவன் போல உணர்ந்தேன்”. – என்ன முடிவுல இருக்கீங்க ஜெயமோகன். ஒவ்வொரு நாளும் இன்னைக்கு என்ன சொல்லி அழ வைப்பிங்க்லோனு தான் தோணுது உங்க வலைத்தளச் சுட்டியை சொடுக்கும் போதே.
ஒரு விஷயத்தை தெரிந்துகொள்ள ஆசையாக இருக்கு. இது வரைக்கும் நீங்கள் வலைதளத்தில இட்ட பதிவுகளில இந்த(அறம் முதல்…) பதிவுகளுக்கு தான் அதிகமான வாசக கவனம் ஏற்பட்டிருக்கும்னு நெனைக்கிறேன். சரியா?
ஏன் இத்தனை பெரிய பிரவாகம கொட்டறீங்க? எது இதற்க்கான தூண்டுதல்?
நன்றிகளுடன்,
சுந்தரவடிவேலன்.
அன்புள்ள சுந்தரவடிவேல்
இந்தக்கதைகள் அனைத்துமே ஒரே ஊற்றில் இருந்து உருவானவை. பலசமயம் ஒரே வேகத்தில் முப்பது பக்கம் நீளமுள்ள் ஒருகதை எழுதி முடித்து இருபதாம் நிமிடத்தில் அடுத்த கதையை எழுதியிருக்கிறேன். எல்லா கருக்களும் பழையவை. எங்கோ கிடந்தவை. அந்தக் கதைக்கருக்கள் மேல் ஆவேசத்துடன் முட்டினேன். இரு கதைகள் பாதியில் கைவிட்டன. இரு கதைகள் முடிந்தும் சரியாக அமையவில்லை. பிற சிறகு கொண்டு எழுந்து வானில் தாங்களாகவே பறந்தன.
இந்த வேகத்திற்குப்பின்னால் உள்ள காரணம் என்ன என்றால் தெளிவாகச் சொல்லத்தெரியவில்லை. நான் நம்பியிருப்பவற்றின் அடிப்படைகளைப்பற்றிய ஆழமான ஐயத்தை சில நிகழ்ச்சிகள் மூலம் அடைந்தேன். என்ன மிஞ்சுகிறதென கணக்கிட ஆரம்பித்தேன்.
வரும் ஏப்ரலில் எனக்கு ஐம்பது வயதாகிறது. நான் வைத்திருப்பவை சொற்களா இல்லை நம்பிக்கைகளா இல்லை அடிப்பப்டையான உண்மைகளா என நானே உறுதிசெய்துகொள்ள வேண்டியிருக்கிறது. சின்ன விஷயங்களில் இருந்து விடுவித்துக்கொண்டே இருந்தாகவேண்டியிருக்கிறது
இல்லை சுந்தரவடிவேல். நீங்கள் நம் மக்களைப்பற்றிய அதிக நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள். சினிமாவைப்பற்றிய சாதாரணப் பதிவுகளுக்கு வந்த வருகையாளர்களில் முக்கால்பங்கினர்கூட இக்கதைகளுக்கு வரவில்லை. மிஷ்கின் சம்பந்தமான வம்புகள் இணையத்தில் பெருகியநாட்களில் மிஷ்கினின் நந்தலாலா பற்றி நான் என்ன சொல்கிறேன் என்று தேடித்தான் அதிகம்பேர் இந்த தளத்துக்கு வந்தார்கள்.
இந்த சூழல் உருவாக்கும் அவநம்பிக்கைதான் இந்தக்கதைகளை எழுதும் அற எழுச்சி நோக்கி என்னை மீண்டும் தள்ளுகின்றன. யானைடாக்டர் எந்த நம்பிக்கையில் அந்த வாழ்க்கையை முழுமைசெய்தார் என்று தேடச்செய்கின்றன
ஜெ
அன்பின் ஜெ.எம்.,
குறிப்பிட்ட இந்தச் சிறுகதைகளின் கதை வரிசையில் என்னை உச்சி முதல் பாதம் வரை உலுக்கியெடுத்துக் கண்ணீர் சுரக்க வைத்தது இந்தப்படைப்புத்தான்..!.
சாதியின் கொடிய தீட்டை அதிகாரத்தாலோ , உயர்சாதிப்பெண்ணை மணப்பதாலோ கடக்க முடியாமல்….ஆதிக்கக் கிண்டல்களின் நுட்பமான விஷத்தீண்டல்களுக்கு ஆட்பட்டுக் கொண்டே இருக்கும் காப்பனைப் போல நம்மைச் சுற்றிலும் (உமாசங்கர்,சிவகாமி என..) எத்தனை எத்தனை பேர்!
நாற்காலியில் அமர்ந்து விட்ட பிறகும் -அது ஏதோ கருணைப்பிச்சை என்று மட்டுமே எண்ணியபடி - ஆதிக்கம் செலுத்த வக்கற்ற/தகுதியற்ற அடிமை வம்சத்தின் சங்கிலிக் கண்ணியாகவே பாவிக்கும் உயர்/கீழ் அதிகாரிகளின் சாதி மேலாதிக்கம்.,சமூக/அலுவல் தரத்தின் அடுத்த படிக்கட்டை எட்டக் கணவனின் மூன்றெழுத்து துணையாவதால் அவனது சாதியைப் புறந்தள்ளும் மனைவி; முற்போக்கு முத்திரைக்காகவே ஏறுக்கு மாறான விடை வந்தும் மதிப்பெண் போடும் தேர்வுக்குழுவினர்…! மிகச் சரியான – அசலான பார்வைகள் அவை என்பதைத் தவிர வேறேதும் சொல்லத் தோன்றவில்லை…
என் மனதில் நிலைத்த சித்திரமாய் ஓலமிட்டுக் கொண்டிருப்பவள் மலத்திலும்,மூத்திர நாற்றத்திலும் துழாவித் துளைந்தபடி சோற்றிலும்.தீனியிலும் மட்டுமே வாழ்வையும் அதன் அர்த்தத்தையும் கண்டு கொண்டிருந்த அந்தத் தாய்தான்!
உயர் சாதியினராகக் கொள்ளப்பட்டவர்கள் மீது வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள நேரும் பயம் கலந்த மரியாதை – தாங்கள் வலுவில் ஏற்க நேர்ந்ததாக அமைந்து விட்டாலும் – அதைத் தாண்டியதாகத் தங்களை மேலாதிக்கம் செலுத்தும் மாற்றுசாதியின் மீதான அருவருப்பு(தான் புழங்கும் அழுகல் பண்டங்களை விட அவளுக்கு இதுவே அருவருப்பூட்டுகிறது),
வெறுப்பு ஆகியவற்றையே அவளது நனவிலி மனம் பதிவு செய்து வைத்திருக்கிறது.
மருமகள் மீதும்,அவள் நிறத்தின்மீதும்,தம்புரான்கள் தரிக்கும் வெள்ளுடையின் மீதும் ,அமரும் நாற்காலியின் மீதுமான காழ்ப்பாகவும்,பயமாகவும் ,அசூயையாகவும் அவளிடமிருந்து வெளிப்பாடு கொள்ளும் உணர்வுகள் அந்த ஆழ்மனத் தூண்டலினால் நேருபவையே..
தாய் தூண்டும் வெறுப்பு மற்றும் குரோத உணர்வுகள் அவனுக்குமே பதவியின் குறியீடாகிய நாற்காலியின் மீது ஒரு கையாலாகாத விரக்தி மனப்பான்மையை முதலில் தோற்றுவிக்கிறது;எனினும் அதைப்பற்றிக் கொண்டு , அதன் வழியாக மட்டுமே தன் மீது இதுகாறும்படர்ந்தவற்றைத் தான் கடந்து செல்லமுடியும்.., .போட்டித் தேர்வு எழுதுமாறு குரு தன்னைப் பணித்ததற்கு அதுவே காரணம் என்பதை அவன் புரிந்து கொள்ளும் வகையில் கதை நேர்மறையாக முடிவு பெற்றிருப்பது நம்பிக்கை தருகிறது
ஆயிரம் …லட்சம் நாற்காலிகளில் இந்த மைந்தர்கள் அமர்ந்து – அப்படி அமரும் எல்லாத் தகுதியும்தமக்கு உண்டு என்றும் உணரத் தொடங்கும்போதுதான்(குறிப்பாக தருமனின் மனைவிசுபா இதை அவனுக்குச் சுட்டிக் காட்டுகிறாள்) எத்தனையோ தலைமுறைகளாக நெஞ்சில் நெருப்புச் சுமந்தபடி இருக்கும் அவர்தம் அன்னையரின் அனல் அடங்கக்கூடும்..! பிராயச்சித்தம் என்று குரு குறிப்பிடுவதும் கூட இதுதானென்றே நினைக்கிறேன்.
.
கதையின் உணர்வு பூர்வமான கட்டங்களில் என்னை மிகவும் பாதித்த பகுதிகள்..
தாய்-மகன் சந்திப்பு முதலில் நிகழுமிடம்.
அழுகலை உண்டதால் மகன் சாவின் பிடியில் கிடக்கும் கட்டத்திலும் கூட…..அவனது முன் தலைமுறையை நினைவுகூர்ந்து ‘இவனும் அவர்களோடு போய்ச் சேர்ந்து விடலாகாதா’என்ற ஒரு கண நினைப்பு தகப்பனுக்குள் தலையெடுக்கும் அந்தக்கட்டம்…
அறியாத வரலாறுகளுக்குள் புதைந்து கிடக்கும் மானுட வாழ்வின் அவலமான, அற்புதமான, அற்பமான, விசித்திரமான கணங்களைப் புனைவுகளாக ஆவணப்படுத்தி வரும் தங்களுக்கு நன்றி…
அன்புடன்,
எம்.ஏ.சுசீலா
அன்புள்ள ஜெ,
நூறுநாற்காலிகள் கதை அச்சு அசல் அப்படியே என்னுடைய நண்பனின் கதை என்றால் நம்ப மாட்டீர்கள். இதேபோல ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தவன் அவன். என்னுடன் அரசாங்க அதிகாரியாக ஆனான். அவனுடைய பெற்றோர்தான் அவனுடைய பிரச்சினை. அவன் அம்மா ஊரில் இருந்து சந்தர்ப்பம் கிடைத்தால் ஆபீஸுக்கு வந்து அவனுடைய கீழே வேலைசெய்யும் கிளார்க்குளிடமும் பியூன்களிடமும் ‘புள்ளைய பாத்துக்கிடுங்க சாமி…’ என்று கைகூப்பி கெஞ்சிக்கொண்டிருப்பாள். அவன் எவ்வளவோ சொன்னாலும் கேட்க மாட்டார்
அவனுடைய சாதியிலேயே அவனுக்குப் பெண்பார்த்தார்கள். படிக்காத பெண். ஒரு வகையிலும் அவளை அவனுக்கு பொருத்தமுடியாது. வயதும் மிக அதிகம். ஆனால் முறைப்பெண். சாதிப்பஞ்சாயத்திலேயே சாராயத்தை குடித்துவிட்டு அந்த பெண்ணைத்தான் அவன் திருமணம் செய்தாகவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அவன் வேறு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டான். சாதிப்பஞ்சாயத்து கூடி அவனை விலக்கி வைத்தார்கள்.
அவன் நாநூறு கிலோமீட்டர் தள்ளி ஒரு ஊரிலே வேலைபார்த்தான். அவன் அப்பா வேண்டுமென்றே அங்கே வந்து அவனுடைய ஆபீஸ் வாசலிலேயே ஷேவ்செய்யும் கருவிகளுடன் அமர்ந்து தொழில் செய்வார். அவன் அம்மா அங்கே வந்து அவனிடம் ஊருக்கு வந்திரு தம்பி என்று கெஞ்சி மன்றாடுவார். ஆபீஸில் உள்ளவர்களிடம் தம்பிக்கு எடுத்து சொல்லுங்க சாமி என்று கெஞ்சுவார்.
அவன் தற்கொலை செய்துகொள்வதைப்பற்றிக்கூட நினைத்திருக்கிறான். கடைசியில் வேறு மாநிலத்தில் வேலை கிடைத்து அங்கே தப்பி போனான். நூறுநாற்காலிகள் கதையை அவனுக்கு அனுப்பி வைத்திருக்கிறேன். உணர்ச்சிகரமான கதை. நன்றி
டி
[என்பெயரை வெளியிடவேண்டாம். அவனுக்காக]
அன்புள்ள டி,
நீங்கள் nhm என்று தேடினால் ஒரு தமிழ் செயலியை இறக்கிக்கொள்ள முடியும். தமிழில் எழுதலாம்
நூறு நாற்காலிகள் தங்கள் கதையேதான் என மூன்று தனிப்பட்ட கடிதங்கள் வந்திருக்கின்றன. குழந்தைக்கு எச்சிலை ஊட்டிய சம்பவம்கூட ஒருவர் வாழ்க்கையில் நடந்திருக்கிறது. தருமபுரியில் இருக்கையில் என் நண்பர் ஒருவரும் இப்பிரச்சினைகள் வழியாகச் சென்றதை கண்டிருக்கிறேன்
நம் சூழலில் சமூக மாற்றத்தின் உருளைகள் நடுவே மனிதர்கள் ரத்தமும் சதையுமாக கூழாகிக்கொண்டிருக்கிறார்கள்
ஜெ

சிறில்,சங்கரவேல்

அன்புள்ள ஜெயமோகன்,
இந்த சிறுகதை வரிசையில் நீங்கள் எழுதும் சிறுகதைகளில் பெரும்பாலானவை உண்மை மனிதர்களின் கதைகள் மாதிரி தோன்றுகின்றன. அந்த வரிசையிலே வரக்கூடிய கதையாக இந்த நூறுநாற்காலிகள் அமைந்துள்ளது. நடுங்க வைக்கும் கதை. கதையை போகிறபோக்கில் வாசித்துச்ச்செல்லும்போது ஒரு பதற்றமும் துக்கமும் ஏற்படுகிறது. பதற்றம் குற்றவுணர்ச்சியால் வரக்கூடியது. துக்கம் மனுஷனின் கையறுநிலையை உணர்ந்ததனால் வரக்கூடியது. இந்த வரிசையிலே வந்த கதைகளில் இதுதான் உச்சம் என்று ஒவ்வொரு கதையிலும் தோன்றுகிறது. ஆனால் உண்மையிலேயே இதுதான் உச்சம். இந்தவரிசையிலே வரக்கூடிய கதைகளில் எல்லாவற்றிலுமெ நியாயம் சம்பந்தமான கருக்கள்தான். இந்தக்கதையிலே உள்ள நியாயம் ரத்தம் தோய்ந்ததாக இருக்கிறது.
கதையை சொல்லும்போதே அதிர்வை உருவாக்கக்கூடிய கதை. நிறையபேர் அதிலே உள்ள கதையைத்தான் வாசிப்பார்கள். ஆனால் நான் 34 வருஷம் அரசாங்கத்திலே இருந்தவன். ஆகவே அதிகாரத்தைப் பற்றியும் அதிலே உள்ள மக்களின் மன அமைப்பைப்பற்றியும் பேசப்பட்டிருக்கும் இடங்கள் மிக நுணுக்கமானவை என்று நினைக்கிறேன். அந்த இடங்களை வாசித்து கொண்டுதான் மொத்தக்கதையையும் உள்வாங்கிக்கொள்ளமுடியும். தர்மபாலனின் துக்கம் என்ன?. அதாவது ஒவ்வொரு நிமிடமும் மோதி மண்டை உடைத்துக்கொண்ட கூண்டு எது என்று தெரிந்தால்தான் கதையே உள்ளே வருகிறது. அம்மா ஒரு கூண்டிலே இருக்கிறாள் என்றால் மகன் இன்னொரு கூண்டிலே இருக்கிறான். ரெண்டுபேருமே மண்டையை உடைத்துக்கொண்டு ரத்தம் கொட்டுகிறார்கள். உள்ளே சென்றதும் நான் நினைத்தது தூக்கு மாட்டிக்கொள்வதைப்பற்றிதான் என்ற வரி என்னை உடைய வைத்தது.
தலித்துக்கள் பழங்குடிமக்கள் போன்றவர்களின் துக்கத்தைப்பற்றியும் அவர்கள் சுரண்டல் செய்யப்படுவதைப்பற்றியும் நிறையவே வாசித்திருக்கிறோம். கலங்க வைக்கும் பல கதைகள் உள்ளன. ஆனால் இங்கே ஒருதலித்தாக நாமே வாழக்கூடிய அனுபவம் கிடைக்கிறது. கதையில் உள்ள நுட்பமான உளவியல் தகவல்கள்தான் காரணம் என்று நினைக்கிறேன். அவை வந்துகொண்டே இருக்கின்றன. வர்ணனைகள் காட்சியை கண்ணுக்குள் நிறுத்துகின்றன. ‘னின்னும்’ என்று சோறு கேட்கும் அந்த சின்னப்பையனைத் தொடக்கூடிய தூரத்திலே பார்க்கமுடிகிறது. அவன் அனுபவிக்கும் ஒவ்வொரு அவமானமும் சஞ்சலமும் மனசுக்குள் வந்து உட்கார்கிறது. நம்முடைய சொந்த துக்கமாக ஆகிறது
புலம்பத்தான் முடிகிறது ஜெ
சங்கரவேல்
அன்புள்ள சங்கரவேல்,
நன்றி
இந்த வரிசைக் கதைகளில் எல்லாவற்றிலும் பாதிக்குப்பாதி உண்மை கலந்துள்ளது. எவ்வளவு உண்மை என்று சொல்வது எனக்கே கடினமானது என சொல்லியிருக்கிறேன். இக்கதைகளின் மையநிகழ்ச்சிகள் உண்மையானவை. ஒன்று அந்நிகழ்வில் நானே பங்கெடுத்திருப்பேன். அல்லது சம்பந்தப்பட்டவர்கள் சொல்லியிருப்பார்கள். அல்லது செவிவழி வரலாறாக இருக்கும். ’அறம்’ சம்பந்தப்பட்டவரே சொன்னது. சோற்றுக்கணக்கு அறிந்த ஒருவர் சொன்னது. நேசமணியின் கதை பிரபலமான செவிவழிக் கதை. மத்துறுதயிர் நானே சம்பந்தப்பட்டது.
பலகதைகளுக்கு சுந்தர ராமசாமி, அவரது அவை காரணமாக அமைந்திருக்கிறது. வேதசகாயகுமார் பல கதைகளைச் சொல்லியிருக்கிறார். பேராசிரியர் ஜேசுதாசன் சொல்லியிருக்கிறார். யோசிக்கும்போது நான் அடிப்படையான தேடலில் இருந்த காலகட்டத்தில் இக்கதைகள் என்னை வந்து சேர்ந்தது முக்கியமானது என நினைக்கிறேன். அவர்களுக்கு நன்றி சொல்வதில் அர்த்தமில்லை. அவர்கள் எவ்வகையிலோ என் வழிகாட்டிகளாக இருந்திருக்கிறார்கள்.
முன்னர் பல அனுபவங்களை நேரடியாக அனுபவக்கதைகளாக மட்டும் எழுதினேன். அவற்றை அவ்வாறு உண்மைநிகழ்ச்சிகளாக எழுதும்போது அவற்றில் இருந்து நான் பெற்றுக்கொண்ட உச்சங்களை அதில் சேர்க்கமுடியவில்லை. யதார்த்தம் மிக கிடைமட்டமானது. நேரடியான கிளர்ச்சி இல்லாதது. சாராம்சம் உள்ளே வராதது. ஆகவேதான் அவை கதைகளாக ஆகின்றன. அப்போது மொழிக்கும் கற்பனைக்கும் சுதந்திரம் கிடைக்கிறது. கவித்துவமான அழுத்தங்கள் தத்துவார்த்தமான விவரணைகளுக்கு இடம் உருவாகிறது. என்னுடைய உணர்ச்சி உத்வேகம் அதில் பதிவாகிறது
உண்மைக்கதைகள் இங்கே கற்பனைமேல் பதிவைக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே பல துணைக்கதைமாந்தர் கற்பனையானவர்கள். துணைச்சந்தர்ப்பங்கள் கற்பனையானவை. உண்மைநிகழ்ச்சி பெரும்பாலும் சாதாரணமானதாகவே இருக்கும். அதை அப்படியே சொன்னால் அதில் சாராம்சமான அறச்சிக்கல், அற எழுச்சி மேலெழுந்து வரவும்செய்யாது. ஆகவே புனைவின் உத்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உலக இலக்கியத்தில் இது தொன்மையான ஒரு வடிவம். தமிழில் அதிகம் எழுதப்பட்டதில்லை.
இவற்றில் பல கதைகளுக்கு இருபது இருபத்தைந்து வருடத்து வரலாறு உண்டு. நான் இளைஞனாக இருந்தபோது என் சிந்தனையை அதிரச்செய்து என் அறவுணர்வை கட்டமைத்த நிகழ்வுகள், மனிதர்கள் இவை. சிலகதைகளுக்கு முன்னரே ஒரு வடிவம் எழுதியிருக்கிறேன். இந்த வயதில் என்னை நானே மீண்டும் ஆழமாக பரிசீலனைசெய்யும் ஒரு தீவிரமான காலகட்டம் வழியாக நான் சென்றுகொண்டிருக்கிறேன். நான் பேசும் அறம் என்பதன் விரிவும் பெறுமதியும் என்ன என்பதே என் தேடல். இக்கதைகள் அதன் பொருட்டு நான் செய்துகொள்ளும் சுயவிசாரணைகள். எழுத்துதான் என் தியானம் என்பது
உலகமெங்குமாக ஒரு இரண்டாயிரம் மூவாயிரம்பேர் இந்த ஒருமாதக்காலமாக இதே உச்சநிலையில் இதே ஆன்ம விசாரணையில் என்னுடன் வந்துகொண்டிருக்கிறார்கள் என்பது இணையம் அளித்த பேறு. அவர்களின் எதிர்வினைகள் மூலம் என்னுடைய இந்த வேகம் இன்னும் தீவிரப்பட்டது. ஒருவேளை அவர்களின் இந்த உரையாடல் நிகழாதுபோயிருந்தால் இந்தக் கதைகள் ஒன்றிரண்டுடன் நின்றிருக்கலாம்.
நன்றி
ஜெ
அன்பின் ஜெயன்
நூறு நாற்காலிகள் படித்து விட்டு எழுதுகிறேன். என்னால் துக்கத்தை அடக்கவே முடியவில்லை. எதுவும் பேசவும் முடியவில்லை. காப்பனின் அம்மாவில் நான் இருந்தேன். அவளுடன் அழுது அவமானப்பட்டு குட்டியை பிரிந்த தாய் மிருகத்தை போல தவித்து நான் காணத உலகம் இது. போரின் இழப்புகளை மட்டுமே நான் அறிவேன். ஆனால் ஒவ்வொரு நிமிடமும் அவமதிக்கப்படும் துன்பம் அதை விடப் பன் மடங்கு அதிகம். இதை எழுதும் போதும் என் கண்ணில் நீர் வடிகிறது. நீங்கள் பல ஆணடுகள் நலமாய் இருக்க வேண்டும்.
அன்பின் கலா
FM-NEPPL
அன்புள்ள கலா,
இந்தியாவில் நாம் சில விஷயங்களில் இருந்து மேலே வந்துவிட்டோம். ஆனால் இந்தியாவில் இன்னும் இதைவிட ஆழமான சேற்றுக்குழிகள் உள்ளன. ஆப்ரிக்காவில் ஆசியாவின் அறியபடாத நாடுகளில் வாழ்க்கை எவ்வளவோ இருக்கலாம்.
இன்று கொஞ்சம் முன்பு நாகர்கோயில் பேருந்து நிலையமருகே ஒரு பெரிய திறந்த வெளி நரிக்குறவக்குடியிருப்பை பார்த்துவிட்டு வந்தேன். அதில் எத்தனை காப்பான்கள் என யாரறிவார்
ஜெ
அன்புள்ள ஜெயமோகன் சார்,
எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்கள் வீட்டில் தங்கியிருந்த, லுங்கி அணிந்துகொண்டு
கேட்-ஐ திறந்து போட்டுவிட்டு போன இளம் எழுத்தாளர் நலமா?. ‘ நூறு நாற்காலிகள்’ மற்றொரு கிளாச்சிக். நேற்று இரவு என்னால் கடைசி பகுதியை படிக்க முடியவில்லை. நான் சரியாக தூங்க முடியாததற்கு அதுவும் ஒரு காரணம். காலையில் அலுவலகம் வந்துதான் படித்து முடிக்க முடிந்தது. அதன் பிறகே அமைதியானேன்.
வழக்கம் போல என் மனதை பாதித்தது. கதை முழுக்க படிக்கும் தோறும் கூட வருவது ‘அருவருப்பு’ என்ற உணர்வு. நாயாடிகள் வலி எப்படி இருந்திருக்கும் என்று உணர்திவிட்டிர்கள். சாதி படிகளின் மேல இருக்கும் அனைவரும் தங்கள் கீழ் படிகளில் இருந்தவர்களை ஒடுக்கவே செய்திருக்கிறார்கள்.
உண்மையாக சொல்லப்போனால் எல்லோருக்கும் இரண்டு மனம் இருக்கிறது. ஒரு மனம் ஒரு மனிதனின் சாதியை குறித்து குறைவாகவே மதிப்பிடுகிறது. அதற்கு தர்க்கங்கள் எதுவும் இல்லை. அந்த மனம் யாருக்கும் அஞ்சுவதில்லை. இந்த முதல் மனதிற்கு பூச்சுகள் இல்லை. பாவனைகள் இல்லை. அந்த மனதின் எண்ணத்தை வெளியிட்டால் அதுவே சாதிவெறி என்று சொல்லப்படும். கல்வியால், நீதி போதனைகளால் நாம் உருவாக்கிக்கொண்ட தருக்கமணம் சாதி இல்லை என்கிறது. அந்த தருக்க மனம் மட்டுமே சமுதாயத்திற்கு அஞ்சுகிறது. பூச்சுகள் செய்து கொள்கிறது. பாவனைகள் செய்கிறது. இது எங்கும் நடக்கிறது. இல்லை என்று சொல்பவர்கள்அந்த இரெண்டாம் மனதில் இருந்துதான் சொல்கிறார்கள். நீங்களும் இதை எழுதி இருக்கிறிர்கள் என்பது
எனது புரிதல். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
என்னுடைய கவலை என்னவென்றால், சாதியை குறித்த இந்த இரட்டை மானது எப்போது ஒன்றாகும், என்பதுதான்?. இந்த இரட்டை மனது இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தின் அணைத்து பாகங்களிலும் இருக்கிறது. வடிவங்கள் மட்டுமே மாறுகின்றன. இந்தியாவில் சாதிபடிகள் என்றால், வெள்ளையர் நாடுகளில் நிறவெறி.
ஒடுக்குபவர்களின், பாவனைகாரர்களின் மனசாட்சியை இந்த நாற்காலிகளின் ஆணிகள் குத்தும்.
அன்புடன்
குரு மூர்த்தி பழனிவேல், லாகோஸ்
அன்புள்ள குரு,
பொதுவாக நீதி -சமத்துவம் பற்றிய சமூக பிரக்ஞை என்பது அந்தந்த காலகட்டத்திற்குரிய பல்வேறு கருத்தியல்கள், அமைப்புகள் சார்ந்து உருவாகிறது. அதைச் சிந்தனைகளும் கலைகளும் மிகுந்த வேகத்துடன் உந்தும்போதுதான் அது மெல்ல முன்னகர்கிறது. நேற்றைய அநீதி நமக்கு ரத்தம் உறையச் செய்கிறது. அன்றாட அநீதி நம் கண்ணுக்குப் படுவதே இல்லை. நாம் ஓட்டலில் உணவுண்ணும்போது ஐந்து வயது குழந்தை நம் காலடியில் தரையை துடைத்துச் செல்கிறது. நாம் அதை பொருட்படுத்துவதே இல்லை
கலை அந்த அன்றாட பழக்கமனத்தை கொஞ்சம் கீறித் திறந்து வைக்கிறது. இங்கே நாம் அறிந்தவற்றையே மீண்டும் காண்கிறோம். ஆனால் நம் மனசாட்சி தூண்டப்படுகிறது. அந்த உத்வேகம் சிலசமயம் தற்காலிகமானதாக இருக்கலாம். ஆனால் அது ஒரு கூட்டுசக்தியாக ஆகும்போதே சமூகத்தை முன்னகர்த்தும் புதிய அறங்கள் உருவாகின்றன
ஜெ
*
ஜெ,
எத்தனையோ கோஷங்கள் எத்தனையோ கூக்குரல்கள் மேடை கர்ஜனைகள் வசைகள் தராத தாக்கத்தை ஒரு புனைவால் தர முடிகிறதே. இதுவும் நிஜம் என மனதில் பதிந்துவிட்டதாலா? வெறும் புனைவுதான் எனப் படித்தால் அனுபவம் வேறாக இருக்குமோ? இல்லை நிஜத்திலிருந்து எடுக்கப்பட்டதாலேயே இந்தப் புனைவு இத்தனை உக்கிரமானதா? சரசுவதியின் சக்தி வடிவமா?
உலகின் அத்தனை தத்துவங்களாலும், சிந்தனைகளாலும் கைவிடப்பட்ட மனிதர்கள், எல்லாம்வல்லவன் என்றும் கருணா மூர்த்தி என்றும், தந்தையே என்றும் நாமெல்லாம் கூவிப் புகழும் அந்தக் கடவுளினாலும் கைவிடப்பட்ட மனிதர்கள் இந்த உலகில் உண்டா? ‘இருந்தார்கள்’ என்பதா? இல்லை இருந்து கொண்டிருக்கிறார்களா? கடவுளே! கண்களை மூடிக் கண்ணீரை வழிய விடுவதைத் தவிர வேறெதுவும் செய்வதற்கில்லை.
என்ன செய்வது ஜெ! அதையும் சொல்லிவிடக் கூடாதா? கிடைத்ததை வைத்து வாழ்ந்து விட்டுச் சென்றுவிட வேண்டியதுதானா? வேறொன்றும் செய்வதற்கில்லையா? புத்தன் கண்டது இதைத்தானா? மனிதன் எனும் பெயரே ஒரு பட்டமா? தன்னளவில் அதுவே ஒரு பெரும் பேறா? நினைக்க நினைக்க மனது கனத்து சுமையாகிறது. நென்சை அழுத்துகிறது ஏதோ ஒன்று. குற்ற உணர்ச்சிதானா? சட்டையை கழற்றிவிட்டு நாற்காலியை தூக்கிவிட்டு சென்று வாழ்ந்துவிட்டால்தான் என்ன? அது வாழ்க்கையில்லையா? நாகரிகம் என்பது வெறும் வன்மமும், சூழ்ச்சியும், துரோகங்களும் நிறைந்ததில்லையா? மனிதா நீ விலங்கை விட மேலானவன் என்பது எத்தனை பெரிய ஏமாற்று? அது எதற்காக? நாம் பேசி எழுதி கொண்டாடி வழிபட்டு என்ன சாதித்து விட்டோம்? மீண்டும் மீண்டும் நம்மை நாமே தொலைத்துத் தேடி கண்டடைந்து கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். எல்லாமே கற்பிதங்கள் இல்லையா? எல்லாமே கற்பனைக்ளில்லையா? ஒரு வேளை அதை நினைத்துத்தான் கண்ணீர் விடுகிறோமோ என்னவோ?
சிறில் அலெக்ஸ்
அன்புள்ள சிறில்,
ஹிட்லரின் நாஜி படுகொலைகள் வெளிவந்து உலகமே அதிர்ந்த போது காந்தி அதிரவில்லை என்று ஒருமுறை மேடையில் சொன்னார் டாக்டர் எஸ்.ராமச்சந்திரன். அவருக்கு மானுட இருள் தெரியும். அதனால்தான் அவர் அகிம்சையை பற்றிபேசிக்கொண்டிருந்தார். மனிதன் மீதான நம்பிக்கையா அவநம்பிக்கையா அவரை அப்படி பேசவைத்தது என்று சொல்வது கடினம்.
நாம் நின்றுகொண்டிருக்கும் இன்றைய உலகம் மாபெரும் அநீதிகளினாலானது. அதைப்பார்க்க மறுக்கும் மனநிலையை இயல்பாக உருவாக்கிக்கொண்டே இருக்கிறோம். அதன் மேல் வாழ்கிறோம். கலை அந்த மெல்லிய ஜவ்வுப்படலத்தை அவ்வப்போது கீறி விடுகிறது. வான்காவின் உருளைக்கிழங்கு தின்பவர்கள் என்ற ஓவியத்தைப்பற்றி அதைத்தான் சொன்னார் நித்யா. அதைப்பார்த்து கண்ணீர் விடும் ஐரோப்பியன் அந்த உண்மைக்காட்சியை நூறுமுறை நேரில் கண்டிருப்பான்
சென்னையில் தெருக்களில் இரவு 10 மணிக்கு நடந்தால் அன்றும் இன்றும் மனசாட்சி அதிரத்தான் செய்கிறது. குப்பைகள் போல தெருவில் மனிதர்கள் குவிந்திருப்பார்கள். ஏழாம் உலகமும் சரி நூறுநாற்காலிகளும் சரி நாம் நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் உலகத்தை கிழிக்கின்றன. நான் கடவுளும், அங்காடித்தெருவும் அதைத்தான் முயன்றன. அதை இலக்கியத்தின் புனிதகடமை என்றே நினைக்கிறேன்.
எழுதத்தானே முடிகிறது என்று சிலசமயம் தோன்றும். ஆனால் எழுத்துமூலம் மட்டுமே ஏதேனும் செய்யமுடியும் என்றும் தெரிகிறது. இந்த சமூக அநீதிகளின் அடித்தளம் ஆதிக்க வர்க்கமோ அதிகாரமோ ஒன்றும் அல்ல. சமூகத்தின் கூட்டு மனநிலைதான். அது நியாயப்படுத்தி வைத்திருக்கும் விஷயங்கள்தான். அதன் சமகால சமூக அறம்தான்
எழுத்து, கலை, பிடிவாதமாக சிறுகச்சிறுக அதனுடன் உரையாடி கரைக்கிறது. அப்படித்தான் எல்லா மாறுதல்களும் உருவாகியிருக்கின்றன.
நீதியின்மேல் பசி தாகமுள்ளவர்களாக இருங்கள் என்பது ஒரு உபதேசம் அல்ல. சவால். பின் தொடரும் நிழலின் குரல் நாவலில் என் கிறிஸ்து வந்து அதை மீண்டும் சொல்லிவிட்டுச் செல்கிறார்
ஜெள்

ராதாகிருஷ்ணன், மகேஷ்,சதீஷ்

அன்புள்ள ஜெ,
நூறு நாற்காலிகள் ஒரு மனவெழுச்சியின் உச்சநிலை!!!! புறவயமான சாதீய அடயாளங்களை, வாழ்வு நியதிகளை நீக்கி விட்டுப்பார்த்தால், ஆதி மனிதனின் தூய உணர்வுகள் வெளிப்படுவதை உணரலாம். “அம்மா”வில் ஒரு பறவை தன் குட்டியை அடைக்காக்கும் உணர்வு என்னை அதிரச்செய்தது!
சமூக கோட்பாடுகளால் மூடப்படாத, களங்கமடையாத,புரிந்துகொள்ள முடியாத நிலை.
உணர்ச்சிப்ரவாகமாய் பெருக்கெடுத்து ஒடும் நடையும், வாழ்வின் பெருங்கூச்சலோடும் முட்டி மோதும் பாத்திரங்களும்………..
என்ன எழுதினாலும்…. அது சம்பிரதாயமாகவே இருக்கும்…..
ஆன்மாவை அடித்த ஒரு வலி………
சதீஷ் (மும்பை)
அன்புள்ள சதீஷ்
நன்றி
ஒரு தீவிரமான மனநிலையில் இருந்து எழுதியபின் நான் இறங்கிவிட்ட கதை அது. பிறிதொருமுறை வாசித்துத்தான் அது என்ன என்று நானே பார்க்கவேண்டும்
ஜெ
அன்புள்ள ஜெமோ,
நிறைய விஷயங்கள் மனதில் அலை மோதுகின்றன.. முடிந்தவரை
சுருக்கமாக சொல்கிறேன்..
நீங்கள் நம் மக்களைப்பற்றிய அதிக நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள்.
சினிமாவைப்பற்றிய சாதாரணப் பதிவுகளுக்கு வந்த வருகையாளர்களில்
முக்கால்பங்கினர்கூட இக்கதைகளுக்கு வரவில்லை.
எங்கேயோ கேட்ட உதாகரணம்.. ஊர்க் குளத்தில்தான் ஏராளமான
காக்கைகள் இருக்கும்.. மானசரோவரில் ஹம்ச பட்சிகள் வெகு
சிலவே உலவும். (அ) எல்.கே.ஜி வகுப்பில் லட்சக்க்கணக்கில்
சேருவார்கள்.. பி.ஹெச்டி. படிப்பவர் சில நூறு மட்டுமே..
உங்களின் இக்கதைகளை சாமான்யர்களால் புரிந்து கொள்ள முடியாது
மேலும் ஊர் முழுக்க இருப்பது துரித உணவு மனங்கள்.. தத்துவம்,
அறம் புரிந்து கொள்ளும் பொறுமையும் அறிவும் இல்லை..
பல வருடங்களாக உங்களைப் படித்துக் கொண்டு இருக்கிறேன்.
ஆனால் இது நான் எழுதும் இரண்டாவது மடல் மட்டுமே.. உங்களின்
இந்தக் கதைகளை நானும் என் நண்பர்கள் 6 பெரும் படித்துக் கொண்டு
இருக்கிறோம்.. நான் ஒருவன் மட்டுமே ஒரே ஒரு கடிதம் எழுதுகிறேன்..
எழுத்து என்பது அலை அலையாய் எங்கெங்கோ ஏதேதோ அதிர்வுகளை
உண்டாக்கிக் கொண்டு இருக்கிறது.. ஆனால் அவைகளை எழுதியவன்
அறிய சந்தர்ப்பங்கள் வெகு குறைவு..

2 எழுதத்தானே முடிகிறது என்று சிலசமயம் தோன்றும். ஆனால்
எழுத்துமூலம் மட்டுமே ஏதேனும் செய்யமுடியும் என்றும் தெரிகிறது.
அவரவர்க்கென சில விஷயங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன.. ப்ராரப்தம்..
நீங்கள் எழதுவதற்கென படைக்கப்பட்டு இருக்கிறீர்கள்.. எழுதுங்கள்..
எழுத்து என்பது இருளில் காட்டில் எறியப்படும் ஈட்டிகள் போல..
உள்ளே என்ன சேதம் என்று எரிந்தவனுக்கு தெரியாது.. எழுத்து உங்கள்
வரம்.

3 இந்த சமூக அநீதிகளின் அடித்தளம் ஆதிக்க வர்க்கமோ அதிகாரமோ
ஒன்றும் அல்ல. சமூகத்தின் கூட்டு மனநிலைதான். அது நியாயப்படுத்தி
வைத்திருக்கும் விஷயங்கள்தான். அதன் சமகால சமூக அறம்தான்

அற்புதம். ஹிட்லர் காலத்தில் நடந்த விஷயங்கள் தனிப்பட்ட ஒருவனின்
அட்டூழியம் மட்டுமல்ல .. ஒரு கூட்டு மனநிலையின் வெளிப்படும் கூட
என எங்கோ கேட்டிருக்கிறேன்..
வெகு ஆழமான விஷயங்களை போகிற போக்கில் சொல்லிவிட்டு போகிறீர்கள்..
உங்களின் ஒவ்வொரு கதைப்பற்றியும் பத்து பக்கம் எழுத எண்ணங்கள் உண்டு..
எண்ணங்களை வார்த்தைகளைக்க முயற்சிக்கிறேன்..பின்னொரு சமயம்..
ப்ரியங்களுடன்
மகேஷ்.
அன்புள்ள மகேஷ்
நன்றி
ஒரு கதை சிந்தனைகளை முன்வைக்கக்கூடாது, உருவாக்கவேண்டும் என்பார்கள்.
இந்த சிந்தனைகள் வழியாக உங்கள் மனம் சென்றிருக்கிறது என்பதே கதையின் நோக்கமும் கூட
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்,
ஒரே மூச்சில் நூறு நாற்காலிகள் வசித்து முடித்தேன்.
அற்புதம் ! அபாரம் ! இதைத்தவிர வேறொன்றும் தோணவில்லை.
நான் சிறுவயதிலிருந்து கல்கண்டில் சங்கர்லால் துப்பறிகிறார் தொடங்கி தமிழ்வாணனின் ஆயிரம் கண்கள், குமுதத்தில் சாண்டில்யணின் கன்னிமாடம் என்று தொடங்கி பலவருடங்களாக தமிழில் தொடர்ந்து பல ஆசிரியர்களின் படைப்புக்களை கண்டு வருகிறேன்.ஆயினும் உங்கள் எழுத்து வித்தியாசமாக, இதுநாள்வரை கண்ட படைப்பாளிகளிடமிருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கிறது.அது என்னவென்று விளக்கமாகவோ குறிப்பிட்டோ சொல்லத்தெரியவில்லை. இதமா, நெகிழ்வா, சங்கடமா,என்னவுணர்வு என்று அறிய இயலாமல் படிக்கும்போது கண்களில் பனித்திரை கட்டி மனம் கனமாகிறது.
எப்படி முடிகிறது இதுபோல் எழுத ? தமிழை கரைத்துக்குடித்த ஜாம்பவான்களை விட இன்றும் மலையாளவாடை அகலாமல் கூர்மையாக வார்த்தைகளை கொட்டி இதுபோல் தமிழை பிரயோகம் செய்ய எப்படி முடிகிறது ? ஏதாவது வரம் வாங்கிவந்திருக்கிறீர்களா ? காளிதாசனின் நாக்கில் எழுதியதுபோல் ஏதும் அனுபவம் உண்டோ ?
அன்புடன்
கெ.குப்பன்
சிங்கப்பூர்
அன்புள்ள குப்பன்
ஆம், நாக்கில் எழுதியது காளி -காளிவளாகத்து விசாலாட்சி அம்மா))
நான் தூயதமிழில் கொற்றவை எழுதியிருக்கிறேன். தமிழ் தூய்மையாகும் தோறும் நல்ல மலையாளம் நோக்கி நகரும் என்பது என் எண்ணம்
ஜெ
அன்புள்ள ஜெ,
ஒரு காட்டாறு போல கதைகளை எழுதி வாசகனுக்கான பசியைத்தீர்த்து வருகிறீர்கள். எல்லாக் கதைகளுமே ஒரு குறு நாவலைப் போல நீண்டாலும் சிறுகதை என்ற கட்டுமானத்திலிருந்து மாறவில்லை.
நூறு நாற்காலிகள் அந்நியர்களுக்குக் குறிப்பாக மலேசியர்களுக்குப் புதிய களம். இங்கே சாதிப் பிரிவினை வெளிப்படையான அம்சங்களைக் கொண்டிருக்கவில்லை- இந்தியாவைபோல. சாதிமை ,தீண்டாமை, மதியாமை பற்றிய மிக அற்புதமான பதிவு’ நூறு நாற்காலிகள்’. அம்மா என்ற புனித பிம்பத்தை உடைத்தெறிந்த கதை இது.
அம்மாவை அரவணைக்கவேண்டும் என்று அவன் முயற்சி மேற்கொள்ளும் போதெல்லாம் அம்மாமேல் வாசகனுக்கு கோபம் வருகிறது. அப்போது அவன் படும் அவமானங்களின் மீது பச்சாதாபம் பிறக்கிறது. அவனிடம் எஞ்சிய பாசம் ,தன்னை வளர்த்து ஆளாக்கி , தனக்கு முற்றிலும் வேறொரு வாழ்வை அமைத்துத் தந்த குருவின் ஆலோசனையால், அம்மாவால் அவன் எவ்வளவு அவமானப் பட்டும் மீறமுடிவில்லை. அப்படிப்பட்ட அம்மாவை நாமும்தான் தூக்கித் தெருவில் எறிந்துவிடுவோம் என்கிற நிதர்சனத்தை மிகக் காத்திரமாக நிறுவுகிறது கதை.
தீண்டாமையின் புறக்கணிப்பை மிக நுட்பமாக சொல்லிச்செல்கிறது கதை. ஒரு கீழ்ச்சாதிக்காரன் ஒரு நிறுவனத்துக்கு மேலதிகாரியாய் வந்தாலும் அவனுக்கு நேரும் மதியாமையை , கீழ்ப்படியாமையை இந்தியாவின் சாபக்கேடு என்பதை . உலக மக்களுக்குத் தெளிவாகக் காட்டிச் செல்கிறீர்கள்- இந்தக் கதையிலும்.
ஒவ்வொரு கதையும் எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது- மனதைப் போட்டுப் பிசைகிறது. ஒன்றை இன்னொன்று மிஞ்சிக்கொண்டே போகிற சிறுகதைகள் உங்களுடையது.
கோ.புண்ணியவான், மலேசியா.
http://kopunniavan.blogspot.com
அன்புள்ள புண்ணியவான்
நலம்தானே?
இன்றும் இங்கே நீடிக்கும் ஒரு வாழ்க்கைச்சித்திரமே அந்தக்கதையில் உள்ளது. இன்றும் இதே நாகர்கோயிலில் பலநூறு மனிதர்கள் நடுத்தெருவில் திறந்த வெளியில் வாழ்கிறார்கள்
கதை அந்த உண்மையை செரித்துக்கொள்ளும் மனசாட்சியைப்பற்றிப் பேசுகிறது
ஜெ
அன்பின் ஜெ,
நன்றி. உண்மைகளும் உணர்ச்சிகளும் கலந்த கதை. உங்களின் கருத்துக்களுக்கு எதிர் கருத்து வைக்க முயல்கிறேன். முடியவில்லை.
உங்கள் எழுத்தின் தீவிரம் கண்டு ஆச்சரியம் அடைகிறேன். ஆனால் இக்கருத்துக்களை பலர் படித்து உணர, தெளிய முடியாத அளவுக்கு you are so unpopular. I am worried we the Tamil Society losing out a lot of wisdom because of the unpopularity. May be whatever you are saying would have been said before, but we understand you better because we can easily relate to your writings and that too without interpretation.
அனைவரின் உள் மனதில் உணரும் ஆனால் பொதுவெளியில் பேசாப்பொருளை பேசும் வல்லமை, வன்மைக்கு வந்தனங்கள்.
செம்மையாகிறோம் .
நன்றி
கா.முத்துக்குமார்
அன்புள்ள முத்துக்குமார்
உண்மைதான்
தொடர்ந்து சல்லித்தனமான காழ்ப்புணர்வை கொட்டும் ஒரு கும்பலால் என் வாசகர்களாக அமையச்சாத்தியமான ஒரு தரப்பு என்னை இழக்கிறது என எனக்கு தெரியும்
ஆனால் இது என்றும் உள்ள தமிழின் துரதிருஷ்டம். இழப்பு எனக்கில்லை.
அதைமீறி வரும் வாசகர்கள் திடமானவர்கள், நுண்மையானவர்கள். அதுவே போதும்
ஜெ
Dear JM
Started reading “100 Chairs”. Did it with a mild difference – unusually – to take maximum of the story into my head…..!!
I read thru’ the 1st part in my usual speed before shutting down the computer. Today with fresh eyes, though the mind wanted to started with the 2nd part, re-read the first part once again. Really wonderful…
Though belonging to Brahmin community – being in Chennai since birth , I confess that I do not know much about the atrocities that kept (keep ?) happening in the name of casteism and untouchability. The starting episode is so mind blowing that I am beginning to realize the power of the subject aptly being supported by the power of your pen…
As a mark of honor and my gratitude, let me type out my feedback to your story in tamil – AFTER going thru’ the balances of story.
With Love // Suren
Dear sir,
I have been reading your website for some years.The recently published stories are very interesting.Especially the “NOORU NARKALIGAL” was Awesome!
It disturbed me the wholeday.
The story is written in a brilliant manner.very few writers are observing the society like you.I expect more stories and articles in your website so that people like me can have better understanding of the society and its problems in a proper way.
Thank you
Regards
mveerabhadran
kattayanvilai
nagercoil
அன்புள்ள வீரபத்ரன்
கூப்பிடு தூரத்தில் இருக்கிறீர்கள். மின்னஞ்சல் வழி அறிமுகமாகிறோம்))
நன்றி
ஜெ
dear j,
i am radhakrishnan from madurai.yesterday i read nooru narkalikal story all parts in one stroke.i am overwhelmed with deep feelings.i was unable to control my sorrow.
it is very easy to blame brahmins for all the plight of such low cast(supposed to be) people.but i,as a brahmin,today bows my head in shame as our people were in someways
the reason for the creation of the cast ism in the society.kindly tell me ,are brahmins only to be blamed for this?what about other people who took advantage of this and
suppressed others.are they not selfish?they have done atrocities and inflicted untold brutalities on lower people at the cost of microscopic minority brahmins and are continuing the same even today.
as is very well known brahmins are very adaptable and wishes to share all good and bad things with others.even ,love marriages are common nowadays(.inter cast).
.i sincerely want to tell others that we are second to none in doing service to lower people.it is our moral oblication also.
what about rajaji,madurai vaidyanatha iyer and numerous others? reasonable people like you are the only solace for us today’.
there is a fear in my mind whether such stories may evoke more hatred in others against brahmins unnecessarily..please clarify
radhakrishnan,madurai.
அன்புள்ள ராதாகிருஷ்ணன்
இந்த மாதிரி ஒரு ஐயம் குற்றவுணர்ச்சியில் இருந்து வரலாம். சுய பாதுகாப்பு சார்ந்த எச்சரிக்கை உணர்ச்சியில் இருந்து வரலாம். இதற்கு நான் என்ன பதில் சொல்லமுடியும்? பிராமணர்களை வைவார்கள், ஆகவே இதையெல்லாம் எழுதவேண்டாம் என்கிறீர்களா?
சாதிய முறையின் வேர்கள் மேலிருந்து கீழ்நோக்கி கருத்தியலால் செலுத்தப்பட்டவை அல்ல. கீழிருந்து மேல்நோக்கி பழங்குடிவாழ்க்கையின் சடங்குநம்பிக்கைகளில் இருந்து கொண்டுசெல்லப்பட்டவை. இந்தியாவில் இன்றும் உக்கிரமான தீண்டாமையும் சாதியும் வெளியுலகம் அறியா பழங்குடிகளில்தான் உள்ளது.
சாதியமைப்பு மற்றும் தீண்டாமையின் பொறுப்பு எல்லா உயர் சாதிக்கும் சமம். பிறரை குற்றம் சாட்டுபவர்கள் தங்களை மறைக்கவே அதைச் செய்கிறார்கள். அவர்கள் மாறினாலே போது முக்கால்வாசி பிரச்சினை தீர்ந்துவிடும்
ஜெ

குமரன், இளங்கோ

அன்பின் ஜெமோ,
நலம்தானே ?
அறம், சோற்றுக் கணக்கு ஆகிய கதைகளில் ஆரம்பித்து இப்போது நூறு நாற்காலிகளில் வந்து நிற்கிறேன். இன்னும் சில நாட்களில் இந்த கதை மாந்தர்கள் மறந்து போகலாம். ஆனால், இனிமேல் சாலைகளில், நாற்றம் வீசும் சாக்கடை ஓரங்களில் தங்கி இருக்கும் மக்களை பார்க்க நேர்ந்தால் இந்த கதைக் களன் கண்டிப்பாக வந்து போகும்.
இவர்களைப் போன்றவர்களின் நிலைமை எப்போது மாறும், ஒருவேளை நீங்கள் இறுதியில் முடித்தது போல நூறு நாற்காலிகளில் இவர்கள் உட்கார்ந்தால் நிலைமை மாறும் என்று நம்புவோமாக. இதில் கிராமம், நகரம் என்று இல்லை, எல்லா ஊரிலும் ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள். நகரத்தில் என்ன சாதி என்று கேட்காமல் யாரும் வீடு கொடுப்பது இல்லை. தீட்டு என்ற தலைப்பில் நான் எழுதிய சில வரிகள் நினைவுக்கு வருகிறது, அந்த வரிகள்;
நான் இல்லாத பொழுதில்
வீட்டுக்கு வந்த நண்பன்
புத்தகம் கேட்க
“உள்ள வந்து எடுத்துட்டு போ”
என சொல்ல
அவன் புத்தகத்தை தேடும் சமயம்
“ஏம்பா.. நீ நம்ம சாதி தானே”
“இல்லைங்க”
“அப்புறம்… ? ”
“நான் வந்து.. நான் வந்து”
“மூஞ்சிய பாத்தப்பவே நெனச்சேன்… வெளிய போ”
அப்புறமாய்
வீட்டுக்குள் தெளிக்கப்பட்ட
மாட்டு சாணியின்
வாசம் இன்னும் போகவில்லை !
மனிதனை மனிதன் வெறுக்கும் தன்மையை என்னவென்று சொல்வது.
உயர் சாதிக் காரர்களிடம் மாட்டிக் கொண்டு தன் மகன் தவிப்பதாக, அவர்கள் அவனைக் கொன்று போடுவார்கள் என நினைக்கும் தாயின் எண்ணம் மகத்தானது என்றுதான் தோன்றுகிறது. அவளுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது அது தானே.
சோற்றுமலை, சோற்று மணல் வெளி, சோற்றுப்பெருவெள்ளம், சோற்றுயானை… உலகமில்லை. சூழல் இல்லை. சோறும் நானும் மட்டுமே அப்போது இருந்தோம்
சோற்றைத் தவிர நாம் விரும்புவது வேறொன்றும் இல்லை அல்லவா? .
உங்கள் கதைகளும், வார்த்தைகளும் நிஜ உலகத்தை தரிசிக்க ஒரு வழி. நன்றிகள் ஜெமோ.
இளங்கோ
http://ippadikkuelango.blogspot.com
அன்புள்ள இளங்கோ
நன்றி
சாதியம் ஒரு கட்டத்துக்கு மேல் அகப்பிரச்சினைகளாக உருமாறிவிடும். அந்நிலையில் அது அனைவருக்குமே சிக்கலானதுதான். அதிலிருந்து வெளியேற அபாரமான சுயபரிசோதனை தேவைப்படுகிறது. இலக்கியம் அதற்கு உதவட்டும்
ஜெ
அன்புள்ள ஜெ,
நூறு நாற்காலிகள் ……..ஊமை செந்நாய்க்கு பிறகு என்னுள் அதிர்வுகளை உருவாக்கிய கதை. பதினாறு வருடங்களாக இந்திய கல்வி முறை உருவாக்கிய அடிமை மனப்பாங்கில் இருந்து வெளி வருவதே என் போன்ற நடுத்தர வர்க்கததினருக்கு முடிவதில்லை.பல நூற்றாண்டு அடிமை உணர்வை எதிர் கொள்வது என்பது ஒரு யுத்தம் போலவே. முதன் முறையாக ஆங்கில வழிக்கல்வி படித்து வந்த மாணவர்களை நான் பள்ளியில் சந்தித்த போது இது போன்ற ஒரு உணர்வை அனுபவித்துள்ளேன் . பல முறை என் போன்றவர்களை பேச வைத்து வேடிக்கை பார்க்க வேண்டுமென்றே பல பேர் நிறைந்த உள்ளரங்கில் நாங்கள் தேர்ந்தெடுத்து பேச வைக்க பட்டோம். “மாதிரி பத்திரிகையாளர் சந்திப்பு ” என்ற பெயரில் பல முறை மேடை ஏற்ற பட்டேன். புரிந்து கொள்ள முடியாத பல கேள்விகளும் ஏழனங்களும் என்னை நோக்கி உள்ளரங்கில் வீச படும் . அங்கு இருக்கின்ற ஆங்கில புலமை வாய்ந்த பெண்கள் சிரிக்கின்ற வரையில் கேள்விகள் தொடரும். கோப பட்டால் அது அவர்களை உற்சாக படுத்தும். அமைதியாக பதில் அளித்தால் ஏளனங்கள் இன்னும் அதிகமாகும். இனிமேல் மேடையே ஏறக்கூடாது என்று ஒதுங்கி நின்றால் அதுவும் தாழ்வு மனப்பான்மை ஆகி விடும். அப்போது உள்ளரங்கில் இருந்து வெளியே வந்து சிறு நீர் கழித்தால் உண்மையில் அது அமிலம் தான்.
ஆனால் இதை தாண்டி வருவது தான் ஒரு மாற்றம் பெறுகின்ற தலை முறையை சார்ந்தவனுக்கு முக்கியமான தருணம்.இந்த தருணத்தில் தான் ஆணவமும் கர்வமும் அவனுக்கு தேவை படுகின்றன. தன்னை பற்றிய உயர்ந்த , தர்க்கத்துக்கு இடமில்லாத சுய மதிப்பீடு தான் அவனுக்கு வேலி. அவமானங்களை கொண்டே அவன் உறுதியாக வேண்டும். அடுத்த அவமானங்களுக்கு தன்னை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். கண்டிப்பாக அவமானங்களின் வழியாக அவற்றை தாண்டி செல்ல முடியும்.
குமரன்.
அன்புள்ள குமரன்
நம்முடைய சொந்த அவமதிப்புகளைக் கொண்டு சகமனிதன் மீதான அவமதிப்புகளைப் புரிந்துகொள்வதே இயல்பானது என்று எனக்கும் படுகிறது.
நாம் அனைவருமே ஏதேனும் அவமதிப்புகள் வழியாகவே கடந்து வந்திருப்போம். ‘நீ பிறன்’ என எவரையேனும் சொல்லும்போது நாம் அந்த அவமதிப்புகளை எண்ணிக்கொண்டாலே போதும்
ஜெ