Sunday, August 31, 2014

தாஜ் கட்டுரை

இஸ்லாமிய இலக்கிய இளவல்களுக்கு….. ஜெயமோகன் தந்திருக்கும் இருட்டுக்கடை அல்வா – தாஜ்

தாஜூடையது எவ்வ்வ்வளவு நீளம். தலைப்பைச் சொன்னேன்! ஆபிதீன் பக்கம்தான்; ஆனாலும் ஆபிதீன் கொஞ்சம் எழுதவா? வம்பில் மாட்டி விடுகிறார் இந்த தாஜ். என்ன சொல்வது? தக்தீர். ஆமாம், நானாகத்தான் மாட்டிக்கொண்டேன் .சரி, முதலில் ’ஜெயமோகன் Vs தாஜ் – Part 1’ படியுங்கள். ஆச்சா? என் முனகல்களுக்குப் பிறகு வருவது Part 2…!
அரபுலக மக்கள் எழுச்சியால் அச்சத்தில் உறைந்திருக்கும் மன்னர்கள் பற்றி எழுதினால் ஆப்படித்து விடுவார்கள். எனவே ஆபத்தில்லாத இலக்கியம். ஐயோ, இலக்கியத்தில் ஆபத்து இல்லையென்று எவர் சொன்னது?!
ஜெயமோகனின் எல்லா படைப்புகளையும் (முக்கியமாக காடு, ரப்பர்) நான் படித்ததில்லை; என் சூழல் அப்படி. சுமையும் அப்படி. நாம் ஆறு பக்கம் படிப்பதற்கு முன்பே ஆறு புத்தகங்கள் எழுதிவிடுகிறாரே அவர். படித்தவரை – அரசியல் தவிர்த்து –  அவரது எழுத்தும் எள்ளலும் எனக்குப் பிடிக்கும். விசிஷ்டாத்வ விவாதத்தைப் படித்து விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். இந்திய இலக்கிய விவாதத்தையும்தான். ’பின் நவீனத்துவத்தைப் புரிந்து கொள்ள முயலாமல் இருப்பதே அதை புரிந்துகொள்ள உகந்த வழியாகும்’ என்று அவர் எழுதும்போது சிரிக்காமல் என்ன செய்வது சார்?  எல்லோருடைய எழுத்தும் எனக்குப் பிடிக்கும் (சுத்தம்!) . ஏதும் இதுவரை எழுதாமல் மௌனமாக வாசிக்கும் உங்களையோ.. ஆஹா, ரொம்பவும் பிடிக்கும்! இதெல்லாம் என் நண்பர்களுக்குப் பிடிக்காது. அதாவது எனக்குப் பிடிப்பது அவர்களுக்குப் பிடிக்காது. ஆனால் அவர்களுக்குப் பிடிப்பதெல்லாம் எனக்கும் பிடிக்கும். சே, ஒரே குழப்பம்… எலக்கிய எளவு செய்யப்போகிறேனோ? நிறுத்தித் தொலைகிறேன். வேறு ஒன்றுமில்லை, ’அறம்’ கதையைப் படித்து நெகிழ்ந்து போன நான், அரசியல் மண்ணாங்கட்டியெல்லாம் தெரியாத மண்ணாந்தையான நான் (இருமுறை ’நான்’ வருவதை அகங்காரத்தோடு மன்னித்துவிடவும்) பாராட்டி எழுதச் சொன்னேன் தாஜை. நானே எழுதினால் என்ன? ஏற்கனவே ‘அங்கண ஒண்ணு’க்கு பாராட்டு வாங்கியிருந்ததால் – அதனாலேயே ’காஃபிர்’ பட்டமும் வாங்கியதால் – பதிலுக்குச் சொரிகிறேன் என்று வந்துவிடுமே என்றுதான். ம்ம்.. விமர்சனம் செய்வதல்லாம் அறிஞர்கள் வேலையல்லவா? அப்போ தாஜை ஏன் எழுதச் சொல்லனும் என்று கேட்டு மேலும் வம்பை வளர்க்காதீர்கள். இந்த தாஜ் ’அறம்’ படித்துவிட்டு . ‘அதிலும் அரசியல் இருக்குய்யா.. அதெல்லாம் ஒன் நாகூர் காஞ்ச மூளைக்கு ஒண்ணும் தெரியாது’ என்று சொல்லிவிட்டு (நாகூரை – முக்கியமாக குஞ்சாலி மரைக்கார் தெருவை – ரொம்ப சரியாக புரிந்திருக்கிறார் இவர்!) , அத்தோடு நில்லாமல் சோற்றுக்கணக்கிலும்’ சில சோறுகள் பதம் பார்த்துவிட்டார். ‘யோவ்.. உனக்கு சங்கடம்னா போடாதே… இது என் பார்வை; அவ்வளவுதான்’.என்றார். ’போடுறதுக்கென்னாய்யா? கூட்டாளிங்க யார் ‘மொய்’ வச்சாலும் போடுவேன். ஆனா அடி வுளுந்தா நீம்பர்தான் வாங்கனும்’. ‘அத நான் பாத்துக்குறேன். லேட்டஸ்டா  தமிழ்நதிநல்லா கிழிச்சிருக்கான் பாரும்’ ‘கார்’ ‘ஓய், இதுவா முக்யம்? பாரும்’. ’சரி’.
விசயத்திற்கு வருகிறேன், ’ஜெயமோகன் Vs  தாஜ்’ (Part 1) வெளிவந்த சமயத்தில், எழுதக்கூசும் மறுமொழியைப் பெற்றது. வெறியோடு மொழிந்தவர் பெயரும் மஹா பயங்கரம். ஒருவாரம் தனது வலைப் பதிவில் ’அதை’ வைத்திருந்த தாஜ் தனது குடும்பத்தாரின் வற்புறுத்தலுக்கிணங்க பிறகு நீக்கி விட்டார் (Screen Shot என்னிடமில்லை. இருந்தாலும் நான் சொல்வதை நீங்கள் நம்பலாம்). அதன் பிறகு வந்தது ’நான் கடவுள்’. ஜெயமோகனின் வசன வலிமையை மிகவும் பாராட்டினார் தாஜ். அதுதான் ’பெரியாரிஸ்ட்’ தாஜ். (கடவுளைத் திட்டினால்தான் இந்த ஆளுக்குப் பிடிக்குமே!). நல்ல விசயங்களைப் பாராட்டத் தயங்காத நண்பராதலால் தன், சாரி, என் கதைகளைப் பாராட்டுவதில்லை. நாயனின் தீர்ப்பு!
இந்த விமர்சனத்தில் தாஜ் வைக்கும் குற்றச்சாட்டுகளில் ஒன்று வைக்கம் பஷீரை ஜெயமோகனுக்குப் பிடிக்காது என்பது. அதற்கு அவர் ஆதாரம் ஏதும் தரவில்லை. நான் படித்தவரை பஷீரை மிக உயர்வாகவே பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார் ஜெயமோகன். ’இந்திய எழுத்தாளர்களில் உங்களுக்கு மிகப்பிடித்தமானவர் யார்?’ என்ற கேள்விக்கு ’வைக்கம் முகமது பஷீர்தான்’ என்கிறார். பார்க்க :    புன்னகைக்கும் பெருவெளி |  மொழியின் புன்னகை  . அதைவிட தன்னை உயர்வாக எங்காவது சொல்லியிருப்பாரோ ஜெயமோகன்? தெரியவில்லை. அட, சொன்னால்தான் என்ன? நான்கூடத்தான் எழுத்தாளன் என்று சமயத்தில் சொல்லிக்கொள்கிறேன். உண்மையா அது? என்னைத்தவிர எல்லோருமே நன்றாக எழுதுகிறார்களே… தூக்கிப்போட்டுவிட்டு வேலையைப் பார்க்கப் போங்கள் ஐயா..  ’இத்தனை நாள் ஏன் ‘கெத்தேல் சாகிப்’ பற்றி எழுதவில்லை?’ என்று தாஜ் கேட்பதெல்லாம் ரொம்பவும் ஓவர்.
’விமர்சகனின் பார்வையில்’ சிறந்த நாவல்களில் ஒன்றாக தோப்பில் முகமது மீரானுடையதைச் சொன்னாலும், குறிப்பிடவேண்டிய நண்பர்களான ஜாகீர்ராஜாவையும் , மீரான்மைதீனையும் அவ்வப்போது குறிப்பிட்டாலும் பொதுவாக தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களை (மனுஷ்யபுத்திரன் முஸ்லிமா என்று தெரியவில்லை!) ஜெயமோகன் கண்டுகொள்வதில்லை என்பது உண்மைதான். ஆனால் ’தோப்பிலை’த் தவிர்த்து (படைப்பிலக்கியத்தில் ) யாரும் தொடர்ந்து இயங்குவதில்லையே.. நாமும் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரே வழி, தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் தினம் மூவாயிரம் பக்கங்கள் எழுதுவதுதான். ஜமாலன் சார், ஸ்டார்ட்!
ஒரு கிண்டல் மேற்கோள் :
‘நான்கடந்த இருபதாண்டுகளாக தொடர்ந்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டு பழகிப்போனவன். சரியாக புரிந்துகொண்டவர்கள் எதிரிகளாக இருக்கிறார்கள்!’ – ஜெயமோகன்
ஒரு சின்ன கதையைச் சொல்லி முடித்துக்கொள்கிறேன். சாகித்திய அகாதமி பரிசு பெற்ற , கோவிலன் எழுதிய ’தட்டகம்’ நாவலில் வருகிறது:
முற்காலத்தில் பருந்து ஒன்று எலிக்குட்டியைக் கொத்தியெடுத்துப் பறந்தது. அப்போது ஆயுளின் வலிமையால் பருந்தின் நகங்களில் சிக்கித் துடித்த எலிக்குட்டி ஜல தர்ப்பணம் பண்ணிக் கொண்டிருந்த முனிவரின் உள்ளங்கையில் விழுந்தது. முனிவரின் விருப்பத்திற்கேற்ப அந்தச் சிற்றுயிர் மனித உருவத்தில் வளர்ந்தது. அழகு நிரம்பிய கன்னிப்பெண். எல்லாத் திறமைகளும் பொருந்திய ஒரு ஆடவன் கன்னிகையை மணம் புரியவேண்டும் என்பது முனிவரின் ஆவல். கணக்கற்ற கதிர்களைக் கொண்ட சூரியனை முனிவர் அனுகினார் . சூரியன் கூறினான்:
‘என்னைக் காட்டிலும் தகுதியுடையவன் மேகம் ஆவான். மேகம் பலமுறை என்னை மறைக்கிறான். ஒளி குன்ற வைக்கிறான்’
திருமண ஆலோசனையுடன் முனிவர் மேகத்தை அணுகினார். மேகம் சொன்னான்:
‘மலையே என்னைக் காட்டிலும் பெரும் தகுதி கொண்டவன். மலை என்னைத் தடுத்து நிறுத்துகிறான். பாதை தெரியாமல் நான் சிதறிப் போகிறேன்.’
முனிவர் மலையிடம் போனார். மலை சொன்னான் : ‘மகா முனிவரே.. என் இயலாமையைத் தாங்கள் காணவில்லையா? அசையக் கூட இயலாத துன்பத்தில் இருக்கும் என்னை எலி குடைகிறது பாருங்கள். எத்தனை எத்தனை பொந்துகள்.  எலியே சகல ஆற்றலும் முழுத் தகுதியுமுடையவன்’ என்று. உணர்ந்த முனிவர் எலியிடம் வேண்டினார். ‘மூஷிக வீரனே, இவள் கன்னிப் பெண். என் வளர்ப்பு மகள்; தாங்கள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்’. எலி திடுக்கிட்டது. ‘தங்களின் மகள் ஒரு மனிதப் பெண்; நான் எப்படி ஏற்றுக்கொள்வது’ மகளின் நெற்றியில் முனிவர் ஆசி வழங்கினார். வட்டக்காதும் , வாலும் முளைத்து அவள் மீண்டும் எலியானாள்.
அவ்வளவுதான் கதை. இந்த பதிவுக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம்? அதான் இலக்கியம்!
**
சோற்றுக்கணக்கு: இஸ்லாமிய இலக்கிய இளவல்களுக்கு….. ஜெயமோகன் தந்திருக்கும் இருட்டுக்கடை அல்வா
ஜெயமோகனின் இணைய தளத்தில்
அவரது சமீபத்திய சிறுகதையான
சோற்றுக்கணக்கு‘ படித்தேன்.
வறுமையின் அழிச்சாட்டியம்/
உறுத்தும் பசி/
தனி மனித மாண்புகளென
இதுகாரும் தீரப் பேசிய புனைவுகளில்
சொல்லத் தகுந்த புனைவு இது.
அத்தனைக்கு வளம்!
*
இவ்வாண்டு
நாஞ்சில் நாடனுக்கு கிட்டிய
சாகித்தியஅகாடமி விருதையொட்டி அவருக்கு
சென்னை – ரஷ்யன் கல்ச்சுரல் அகாடமியில்
ஜெயமோகன் தயவில் / டைரக்சனில்
நடந்தேறிய பாராட்டுக் கூட்டத்தில்
நாஞ்சில் நாடனின் சமீபத்திய சிறுகதைத் தொகுப்பான
‘கான் சாகிப்’ வெளியீடும் நிகழ்ந்தது.
விழாவுக்கு போயிருந்த நான்
அத்தொகுப்பை அங்கே வாங்கினேன்.
அன்று இரவே
குறிப்பிட்ட அந்தக் கதையைப் படித்தேன்.
மறுநாள் புத்தகத் திருவிழாவில்
நாஞ்சில் நாடன் அவர்களை சந்திக்க வாய்த்தபோது
‘கான் சாகிப்’ குறித்து அவரிடம் சிலாகிக்கவும் செய்தேன்.

‘கான் சாகிப்’
சுத்த யதார்த்தம் சார்ந்த புனைவு.
ஜெயமோகனுடனான நேர்ப்பேச்சில்
நிகழ்வின் சம்பவங்களை நினைவுகூர்ந்து
நாஞ்சில் நாடன்
சொல்வது மாதிரியான அமைப்பியல்.
பம்பாயில் வைத்துப் பழகிய
இஸ்மாமிய நண்பர் ஒருவரின்
ஆத்மார்த்த நினைவுகளின் தொகுப்பாய்
அவரது மாண்புகளையும்
குறிப்பாய் அவரது விருந்து உபசரிப்புகளையும் மெச்சி
நாஞ்சில் நாடன்
மனமுருக சொல்லிக் காட்டியிருக்கிற கதைதான்
‘கான் சாகிப்’
அது பலரது பாராட்டையும் பெற்றக் கதையும் கூட.
கிட்டத்தட்ட இதே ரிதத்தில்தான்
இன்றைக்கு தன் சோற்றுக்கணக்கை
நமக்குச் சொல்லி நெகிழ்ச்சியூட்டியிருக்கிறார் ஜெயமோகன்.
ஆனால்….. 
*
பொதுவில்…
தான் எழுதும் புனைவுகளில்
கற்பனைக்கு
முக்கியத்துவம் தருபவர் ஜெயமோகன்.
இலக்கிய ஆக்கத்திற்கு அதுதான்
ஆகச் சிறந்த யுக்தியெனவும் போதிப்பவர்.
கூடவே
தனது கற்பனைக் குதிரையின் வேகத்தை மெச்சிக் கொள்பவர்.
பறக்கும் தன்மை வாய்ந்ததென்றும் நம்புபவர்.
அவரது நம்பிக்கை பொய்க்காதபடிக்கு
அவர் குதிரை பறந்துகொண்டுதான் இருக்கிறது.
அவரும் ஜெயித்துக்கொண்டுதான் இருக்கிறார்.
இந்தக் கதை,
அவரது இலக்கியநெறியின் பிரதிபலிப்பாக இல்லாமல்
நவீனம் சார்ந்த யதார்த்தத் தோற்றம் கொண்டதாக இருக்கிறது.
இப்படித் தோற்றம் கொள்ளும் கதைகளை
இதற்கு முன்பும் அவர் எழுதி இருக்கிறார்.
‘தோற்றம்’ என்பதை இங்கே அடிக்கோடிடுகிறேன்.
இந்தக் கதையில்
கதையின் காலமும்….
கதையின் களமும்….
துல்லியம் காணப்பட்டிருக்கிறது.
கதையின் மையமாக காட்டப்பட்டிருக்கும்
‘கெத்தேல் சாகிப்’ சாப்பாட்டுக்கடையின்
நேற்றைய, இன்றைய விலாசம்
முந்தைய அதன் சிறப்புகள்
இன்றைய அதன் வளர்ச்சிகள் என்பனவெல்லாம்
படு சுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
‘கெத்தேல் சாகிப்’ குறித்து
கதையின் நாயகன் தன் நினைவுகளிலிருந்து
வியக்கும் வியப்புகளின் தொகை
சரமாரியாகப் பதிவாகி இருக்கிறது.
இதெல்லாம்….
ஓர் யதார்த்தக் கதையின் கூறுகளென
அறுதியிட முடியும்.
இந்தக் கதையின்படி
நம்பத்தகுந்த தகவல்களென
இன்னும் சிலவற்றையும் குறிப்பிடலாம்.
கதை நாயகனது இளமைக்கால வறுமை./
அவன் அனுபவித்த பசி/
கல்லூரிப் படிப்புக்காக கொண்ட சிரமங்கள்/
‘கெத்தேல் சாகிப்’ சாப்பாட்டுக்கடையின்
பதார்த்தங்களது மணம், நிறம், ருசி/
‘கெத்தேல் சாகிப்’பின்
அன்பு மேவும் செல்ல வசவுகள்.
அந்தச் சாப்பாட்டுக்கடையில்
பணம் தரவேண்டிய நிர்ப்பந்தமற்ற வசதி/
ஐந்து வருட காலம்
கதையின் நாயகன் அதனை
உபயோகித்துக் கொண்ட நிலை/
பசி போக்கி,. உடல் பேணிய
‘கெத்தேல் சாகிப்’பின் கரத்தை
ஓர் தாயிற்கே உரிய கரமாக
கதையின் நாயகன் பார்ப்பதென்பதெல்லாம்
யதார்த்தம் சார்ந்த
நம்பத்தகுந்த தகவலாகவே இருக்கிறது.
இந்தக் கதையினூடே
கதை சொல்லியாக/ நாயகனாக
நான்.. நான்.. என தன்னை வாசகனுக்கு வலுவில்
உணர்த்த முற்படும் ஜெயமோகன்
அக்கதையின்
எல்லா விளிம்புகளிலும் திருப்பங்களிலும்
இருக்கிறாரா? என்பதை
நம்மால் உறுதிசெய்ய இயலாது.
என்றாலும்….
இக்கதையினூடே தன்னை அவர்
முன்னிலைப் படுத்திக் கொள்வதை
உறுதிசெய்யமுடியும்.
இக்கதையில்
ஜெயமோகன் தன்னை
முன்னிலைப் படுத்திக் கொள்ளாது,
ஒரு குப்பனையோ சுப்பனையோ
முன்னிலைப் படுத்தியிருக்கும் பட்சம்
இந்த விமர்சன ஆய்வு தேவையே பட்டிருக்காது.
*
கதைப்படி…
காலேஜில் சேரும் அவரது வயது கணக்கு/
(1968-ல் காலேஜில் சேர்ந்தேன் என்கிறார் ஜெயமோகன்.
1962-ல் பிறந்த அவர்,
1968-ல் ஆரம்பப் பள்ளியில்
இரண்டாம் வகுப்பில்
காலடியெடுத்து வைத்திருந்தாலே அதிகம்.)
அப்புறம்…
டிரைவராக பணியில் சேரும் தம்பி/
தமிழ்சினிமா கதாநாயகன் மாதிரி
செஞ்சோற்றுக் கடனுக்காக
அவர் செய்துகொள்ளும் திருமணம்…
இவையெல்லாம்….
ஜெயமோகன் குறித்து
நான் அறிந்த தகவல்களின் அடிப்படையில்
ஒத்துப் போகாத முரண்கள்.
ஓர் யதார்த்தப் புனைவில்
அதன் எல்லா கூறுகளுமே
யதார்த்தம் சார்ந்து இருக்கணும் என்கிற
கட்டாயம் ஏதுமில்லை என்பதை
இங்கே ஒப்புக்கொண்டாலும்
குறிப்பிட்ட இந்த விமர்சன ஆய்வில்
கதையின் எல்லா கூறுகளையும்
நுணுக்கிப் பார்க்க வேண்டியிருக்கிறது.
*
ஜெயமோகனின் கட்டுரை ஒன்றில்
தனக்கு அன்பு காட்டிய
இஸ்லாமிய நண்பன் ஒருவனின்
தந்தைக்குச் சொந்தமான
மரம் அறுக்கும் தொழிற்சாலை உள்ள
ஓர் அறையில்
வெகுகாலம் தங்கிப் படித்ததாக
அவர் எழுத, நான் படித்த ஞாபகமும் உண்டு.
ஆனால்….
இது நாள்வரை
‘கெத்தேல் சாகிப்’ சாப்பாடுக் கடையைப் பற்றி
அவர் எந்த ஒரு சின்னத் துணுக்கையும்
எழுதி நான் படித்ததில்லை.
ஆக,
இந்தக் கதையை
அவர் சொல்லிய விதமாகவே
இது…
அவரது வாழ்வு சார்ந்த/
அனுபவம் சார்ந்த/
யதார்த்த நிகழ்வுகளின் பதிவாக
ஒப்புக் கொள்ள வேண்டுமென்றால்….
என் மனம் உறுத்தும் கேள்விகளுக்கு
பதில் தேட வேண்டியிருக்கும்.

தன் வாழ்வு சார்ந்த
இத்தனை நெகிழ்ச்சிகள் கொண்ட
சம்பவங்களின் அடுக்கடுக்கான
‘கெத்தேல் சாகிப்’ சாப்பாட்டுக்கடை பற்றி
ஏன் இத்தனை காலமும் ஜெயமோகன் எழுதவில்லை?
இதுவரை அவர் நூற்றுக்கும் மேலாக
சிறுகதைகளை எழுதியிருப்பவர்!
அந்தச் சாப்பாட்டுக்கடைக்கு
ஓர் சிறுகதைக்கு மீறிய வீச்சும்
போதும் போதும் என்கிற அளவில்
நெகிழ்ச்சிகளும் இருந்தும் ஏன் எழுதவில்லை?
விடை ரொம்பவும் வெளிப்படை.
இந்தக் கதை,
யதார்த்தமற்ற
முழுக்க முழுக்க கற்பனையிலான
அச்சு அசல் புனைவு!
புனைவில் கற்பனைக் குறித்து பாடம் எடுத்தவர்
இப்பவும்
அதன் வெற்றியை நிரூபித்திருக்கிறார்.
தவிர,
கதையில் ஜெயமோகன் வியப்பது மாதிரி
‘கெத்தேல் சாகிப்’ சாப்பாட்டுக் கடை
இக்கதையின் பிரதான சங்கதியுமல்ல.
பின்னே…..?
”என் கனவெல்லாம் சோறு.
ஒருநாள் சாலையில் ஒரு நாய்
அடிபட்டு செத்துக்கிடந்தது. அந்த நாயின் கறியை
எடுத்துக்கொண்டுபோய்
குடோன் பின்பக்கம் கல்லடுப்பு கூட்டி
சுட்டுத் தின்பதைப்பற்றி கற்பனை செய்தேன் என்றால்
பார்த்துக்கொள்ளுங்கள். எச்சில் ஊறி சட்டையில்
வழிந்து விட்டது அன்று.”
(சோற்றுக்கணக்கு/ ஜெயமோகன்)
இத்தனை அழுத்தம் தருகிற அளவில்
அவர் சொல்லிக் காட்டியிருக்கும்
அவரது இளமைக்கால வறுமையும்
அதையொட்டிய பசியால் அவர் இன்னலுற்றதும்தான்
இக்கதையின் பிரதானம்.
மற்றதெல்லாம்,
அவர் தன் சொல்லவந்த தன்னைக் குறித்த
செய்திகளை தூக்கி நிறுத்தும் சங்கதிகள் மட்டும்தான்.
அவரின் இளமைக்கால இன்னல்களைப் பற்றி…
அதனோடு கூடிய வறுமை, பசியைப் பற்றியெல்லாம்
முன்னமே நிறையதரம் சொல்லியிருக்கிறார்.
இருந்தும்…
இப்பவும்
அப்படி சொல்லிக் காட்டியிருக்கிறார் என்றால்
அதில் அர்த்தம் இல்லாமல் இல்லை.
இப்படிச் சொல்வதென்பது ஓர்
எழுத்துச் சார்ந்த ‘அரசியல்’.
அவர் குறித்த கழிவிரக்கம் எழுப்பும் பிம்பங்கள்
வாசகர்களின் மனதில்
அவரது இருப்பை அழியா ஆழத்தில்
ஊன்றி நிலைப்படுத்த வல்லது.
இப்போது
மீண்டும் ஒருமுறை
இந்தக் கதையின் வழியே
அவர் அப்படி சொல்லிக் கொள்வது
அவரை நோக்கி அணையும்
இன்றைய புதிய வாசகர்களை
மனதில்வைத்து சொன்னதாக கொள்ளலாம்.
சரி…
‘கெத்தேல் சாகிப்’ சாப்பாட்டுக்கடை?
இந்தக் கதையில்
அதுவோர் ஊறுகாய் சங்கதி!
தன்னைக் குறித்து கதையில் ரசனையாகப் பேச
அவர் தொட்டுக் கொண்ட ஒன்று.
அதை அவர் பிரமாண்டமாக காண்பித்திருப்பதுதான்
அவரது எழுத்து சார்ந்த திறன்..
அதை, யுக்தி… வித்தை… என்றும்கூட சொல்லலாம்.
இத்தகைய யுக்திகளையும் வித்தைகளையும்
வாசகன் அறிந்துணர்வதென்பது கஷ்டம்.
சரியாகச் சொன்னால்
எந்தவோர் துறையிலும்
ஓர் திறமையாளனின் சூட்சமம் கொண்ட வித்தைகள்
அடுத்தவர்களுக்கு அவ்வளவு எளிதில் பிடிபடாது.
இந்த சூட்சமம் குறித்து
இன்னும் யோசிக்கிற போது….
இலக்கியத்திற்குள் வரும்/
நெட்டில் சதா நேரமும் அவரைத் தேடிவரும்/
இன்னும்,
அவரது புத்தகங்களை புதிதாக வாங்கி வாசிக்க வரும்/
இலக்கிய ஆர்வம் கொண்ட
இஸ்லாமிய இளவல்களின் எண்ணிக்கை
அவருக்கு வியப்பூட்டியிருக்கலாம்.
அதையொட்டி
அவரது வாழும் வியாபார ஞானம் விழித்துக்கொண்டிருக்கலாம்.
அவர்களை தன் வட்டத்திற்குள் வைத்துப் பார்க்கும் முகமாக
அவர் கேள்விப்பட்ட
‘கெத்தேல் சாகிப்’ சாப்பாட்டுக் கடையை
இக்கதையில்
மிகச் சரியாகப் பயன் படுத்திக்கொண்டிருக்கலாம்.
நான்,
அவரது பெரும்பாலான கதைகளை
வாசித்தவன் என்கிறவகையில்
இஸ்லாமிய கதாபாத்திரங்கள்
அவரது கதைகளில்
சொல்லும் அளவில் இருந்தது இல்லை.
இத்தனைக்கும் அவர்
சாதி/ மத/ இன/ பேதம் பாராட்டாத
நாராயண குருவின் வழி பேணுபவர்
ஆனாலும் இஸ்லாமியன் என்றாலே
இவருக்கு ஏனோ ஆவதில்லை..
இஸ்லாமியர்களில்
நல்லவர்களே இல்லை என நம்பும்
நல்லவர்களுக்கு மட்டுமே இவர் நண்பர்.
இஸ்லாமியர்களின் நிஜங்களுக்கு குரல் கொடுத்து
அவர்களுக்கு ஆறுதலாக அவ்வப்போது
மீடியாக்களில் வழக்காடி வரும் பேராசிரியர். அ.மார்க்ஸை,
அதற்காகவே கண்டித்தவர் இவர்.
அப்படியான ஜெயமோகன்
இன்றைக்கு…
‘கெத்தேல் சாயபு’ என்கிற இஸ்லாமியரின்
மாண்புகள் எதிரொலிக்க
மெச்சி எழுதினார் என்பது
நம்ப முடியாத செய்தி.
எழுதியிருக்கிறாரே… என்றாலும்
ஆத்மார்த்தமாக அவர் எழுதியிக்கவே மாட்டார்.
அது அவருக்கு வராது.
அப்படியொரு பார்வையே அவருக்கு கிடையாது.
இஸ்லாமிய எழுத்தாளர்களான
‘மதில்கள்’ வைக்கம் முகம்மது பசீராகட்டும்
‘கடலோரக் கிராமம்’ தோப்பில் முகம்மது மீரானாகட்டும்
முன்னால் இலக்கிய ஆகிருதியும்
இன்னால் பிரபல மொழிபெயர்ப்பாளருமான
நாகூர் ரூமி என்கிற, பேராசிரியர் / கவிஞர் ரஃபியாகட்டும்
அப்துல் ஹமீத் என்கிற, கவிஞர்/ ’உயிர்மை’ மனுஷ்யபுத்திரனாகட்டும்கவிஞர் சல்மாவாகட்டும்
யாரையும் அவருக்குப் பிடிக்காது
– என்னையும் சேர்த்து.

*
நாஞ்சில் நாடனின் ‘கான் சாகிப்’
நிஜத்தின் பதிவென்றால்
ஜெயமோகனின் ’சோற்றுக்கணக்கு’
அதன் நேர் எதிர்.
கற்பனையும் யுக்திகளுமானதோர் வித்தை.
*
சோற்றுக்கணக்கைப் படித்துவிட்டு
ஜெயமோகன் இஸ்லாமியனின் மாண்பைப்
பாராட்டிவிட்டாரென குதிக்கும்
இஸ்லாமிய இலக்கிய இளவல்களுக்கு.
இக்கதையின் வழியே
நிஜத்தில்
அவர் தந்திருப்பது
இருட்டுக்கடை ஸ்பெஷல் அல்வா!
பாவம் அவர்கள்,
இடம் பொருள் அறியாமல் ஏமாறுகிறார்கள்.
*
*
ஒரே ஒரு சுட்டி : தமிழில் சிறுபான்மை இலக்கியம் - ஜெயமோகன்

32 பின்னூட்டங்கள்



  1. 24/02/2011 இல் 10:48
    //ஒரே வழி, தமிழ் முஸ்லிம்களும் அனைவரும் தினம் மூவாயிரம் பக்கங்கள் எழுதுவதுதான். ஜமாலன் சார், ஸ்டார்ட்!//
    முதலில் இதனை வன்மையாக கண்டிக்கிறேன். என்னை ஒரு முஸ்லிம் எழுத்தாளர் லிஸ்டில் சேர்க்காதீர்கள். அதற்கும் சேர்த்து நீங்கள் பதில்சொல்ல வேண்டிவரும் இறதிநாளில். காபிரை முஸ்லிம் என்று எப்படி லிஸ்டில் செர்த்தாய் என்று. உங்களை நான் நரகத்திலும் சந்திக்க விரும்பவில்லை. முதலில் எனக்கு இந்த முஸ்லிம், ஆண், தமிழன், இந்தியன், நல்லவன், குடிகாரன் இன்னபிற அடையாளங்களில் நம்பிக்கை இல்லை. அதனால் மன்னிக்கவும்.. (((
    அடுத்து என்னை நீங்கள் “சார்“ என்று அழைப்பது பள்ளிக்கூடத்தை நினைவுட்டுகிறது. அதனால் என்னைப்போல் சாரின் உட்காரும் இடத்தில் ஆணி அடித்துவிடுவீர்களோ என்கிற அச்சம்தான். )))
    மற்றபடி தாஜின் இக்கட்டுரையின் அடிப்படையான புரிதலே சிக்கலானது. எனது கருத்தை விரிவாக எழுதுகிறேன். நீங்கள் விரும்பினால் ஓரிரு நாட்களில் அதை பதிவிடலாம். புரியறா மாதிரியே எழுதுறேன். )))
  2. 24/02/2011 இல் 10:56
    //புரியற மாதிரியே எழுதுறேன். // சரி சார்!
    ஆணியுடன்,
    ஆபிதீன்
  3. 24/02/2011 இல் 14:00
    என்னா ஒரு வில்லத்தனம்.. ஆணிய பிடங்கிடறேன். ஹா ஹா.. விடமாட்டீங்களா சார் இந்த சாரை.
  4. அநிருத்தன் said,

    24/02/2011 இல் 15:41
    என்ன சொல்லி தாஜ் “அவர்களை” ?
    இவ்வளவுதானாய்யா உங்க அறிவு ? ஒரு கதையை வாசிக்கும் விதம் இதாய்யா ?
    இந்த கதை அவருடைய நண்பர் குமாருடையது என்று போரமில் கொல்லியிருக்கிறார் , (முழுசா அல்ல) கதை எழுதறவன் இதையெல்லாமா எழுதமுடியும் ?
    ஏ கொஞ்சம் அறிவ வளத்துக்கங்கப்பா . எனக்கு ஆபிதீனை பாத்தா பாவமா இருக்கு .
    //மற்றதெல்லாம்,
    அவர் தன் சொல்லவந்த தன்னைக் குறித்த
    செய்திகளை தூக்கி நிறுத்தும் சங்கதிகள் மட்டும்தான்.//
    //கெத்தேல் சாயபு’ என்கிற இஸ்லாமியரின்
    மாண்புகள் எதிரொலிக்க
    மெச்சி எழுதினார் என்பது
    நம்ப முடியாத செய்தி.
    எழுதியிருக்கிறாரே… என்றாலும்
    ஆத்மார்த்தமாக அவர் எழுதியிக்கவே மாட்டார்.//
  5. அநிருத்தன் said,

    24/02/2011 இல் 15:59
    பச்சக்கலர் கண்ணாடிய மாட்டிட்டு பாத்தா எழவு அப்பிடித்தாம்லே தெரியும் , இப்படியெல்லாம் எழுதினா இஸ்லாமிய எழுத்தாளர்களில் விவகாரமான ஆட்கள் மட்டுமே உண்டுன்னு முடிவு கட்டிட மாட்டாங்களா வாசகர்கள் ?
    ஆபிதீனய்யா , நீங்களாவது கொஞ்சம் வெசாரிச்சு பாத்து வெளியிட்டிருக்க கூடாதாங்க ? அந்த கதையில வற்ற ஆளு ஜெயமோகனில்லைன்னு ஆயிப்போச்சு.
    இப்ப தாஜ் மாண்புகள் எதிரொலிக்க
    மெச்சி எழுதினார் ஜெயமோகன்னு ஒத்துக்குவார்னு நெனைக்கறீங்களா ? காலத்துக்கும் கண்ணாடிய கழட்ட முடியாதா ஆளுக இவிக.
  6. அநிருத்தன் said,

    24/02/2011 இல் 16:04
    ஏம்வே பயப்படமாட்டாரு ? அதான் தாஜ் மாதிரி ஆளுக உண்டேவே ?
    //[ஆழமாக இவர்களை படித்தும் கூட நானும் மலையாளத்திலேயே இவர்களைப்பற்றி எழுத முடிந்துள்ளது . அதற்கு தமிழ் இஸ்லாமிய சமூகத்தின் மனநிலை குறித்த என் அச்சமே காரணம் . மேலும் சிறு விமரிசனக்குறிப்பைக்கூட அபாயகரமாக திரித்துவிடும் அளவுக்கு எனக்கு இலக்கிய எதிரிகள் இங்கு உண்டு .]//
  7. 24/02/2011 இல் 16:29
    //கதைப்படி…
    காலேஜில் சேரும் அவரது வயது கணக்கு/
    (1968-ல் காலேஜில் சேர்ந்தேன் என்கிறார் ஜெயமோகன்.
    1962-ல் பிறந்த அவர்,
    1968-ல் ஆரம்பப் பள்ளியில்
    இரண்டாம் வகுப்பில்
    காலடியெடுத்து வைத்திருந்தாலே அதிகம்.)
    //
    ஏன் இப்படி? :(( அது அவரது சொந்தக் கதை என்று எங்கே குறிப்பிட்டிருக்கிறார்?
    ஒரு கதையை ‘தன்மை’யில் எழுதினால் அதை அந்த எழுத்தாளரின் சொந்தக் கதையாக வைத்து போட்டு தாளிக்கிறாரே…
  8. மணிசேகரன் said,

    24/02/2011 இல் 19:15
    ஜெயமோகன், கீரனூர் ஜாகிர் ராஜா என்ற இஸ்லாமிய எழுத்தாளரைப் புகழ்ந்து எழுதியிருக்கிறாரே? அது உங்கள் கண்ணில் படவில்லையா? அல்லது ஜாகிர் ஏற்கனவே இஸ்லாமிய சமூகத்தை விமர்சித்திருப்பதால் ஃபத்வா கொடுத்து காஃபிர் ஆகிவிட்டீர்களா?
  9. Jeyakumar said,

    24/02/2011 இல் 19:29
    இருப்பதை இருப்பது மாதிரி மட்டுமே பார்க்க விளையும் நண்பர்களைக் கூட கெடுத்து விடுவார் போல.. கதைய மட்டும் படிங்கய்யா..அதைவிட்டுப்புட்டு…
    ஆபிதீன் அண்ணாச்சி ஏன் இப்படி?
  10. maleek said,

    25/02/2011 இல் 03:22
    எகிப்து மம்மியின் வாயிலிருந்து வரும் ஈக்களைப் போல
    ஜெயமோகனுக்கு எழுத்து வரும் என்கிறார் சாரு.அவருடைய
    மொழிப்பிரவாகம் அப்படி.எழுத்தாளர்களுக்கு சமூகப்பொறுப்பு
    என்கிற ஈரவெங்காயமெல்லாம் சரி.(சென்ற வாரம் நடந்த
    விழாவொன்றில் கலைஞர் ஆட்சியை பொற்காலம் என்று
    நெகிழ்ந்து இருக்கிறார் ஜெயகாந்தன்)….தவிர, முஸ்லிம்,
    காபிர்,நரகம், இறுதிநாள், பத்வா….இது ஆபிதீன் பக்கமா?
    இல்லை வேறெதுவுமா?.
  11. தாஜ் said,

    25/02/2011 இல் 10:39
    ஜெயமோகனின் சோற்றுக்கணக்கை
    நான் விமர்சிக்க முனைந்த மாதிரி
    என் விமர்சனத்தை
    நண்பர்கள் விமர்சிக்கிறார்கள்.
    மெச்சுபவர்களை விட
    விமர்சகர்கள் வரவேற்கப்பட வேண்டியவர்கள்.
    // ‘இவ்வளவுதானாய்யா உங்க அறிவு?
    ஒரு கதையை வாசிக்கும் விதம் இதாய்யா?’//
    அநிருத்தன் என்கிற நண்பர்
    என்னைக் குறித்து
    இப்படி நீட்டி முழங்கி சந்தேகிக்கிறார்.
    என்னத்தைச் சொல்ல….
    // ‘ஏ கொஞ்சம் அறிவ வளத்துக்கங்கப்பா’ //
    அன்னோனியமான அறிவுரை வேறு.
    *
    சம்பந்தப்பட்ட நண்பருக்கு
    ஜெயமோகனை
    எத்தனை வருடமாகத் தெரியுமென்று தெரியாது.
    கணையாழியில்
    ‘கிளிக்காலம்’ எழுதியக் காலம் தொட்டு
    ஜெயமோகனை தெரியும்.
    அவரது, மகா… கனமான ‘விஷ்ணுபுரம்’ நாவலை
    ஒரு முறைக்கு இரண்டு முறைப்படித்து
    என் விமர்சனத்தை நேரிடையாக
    அவரிடமே எடுத்துவைத்தவன் நான்.
    அவரது எழுத்து வல்லமையை குறித்தும்
    நண்பர் அநிருத்தனைவிட
    நன்கு அறிவேன்.
    சம்மந்தப்பட்ட
    சோற்றுக்கணக்கு குறித்து
    // வறுமையின் அழிச்சாட்டியம்..
    உறுத்தும் பசி..
    தனி மனித மாண்புகளென
    இதுகாரும் தீரப் பேசிய புனைவுகளில்
    சொல்லத் தகுந்த புனைவு இது.
    அத்தனைக்கு வளம்!// யென
    தீர்மானமானமாக
    என் கருத்தை முன்வைத்தப் பின்னர்தான்
    விமர்சன வரிகளில்
    கவனம் செய்தேன்.
    நண்பர் கவனித்திருக்க வேண்டும்.
    சோற்றுக்கணக்கு
    ஜெயமோகனுடைய
    சொந்த அனுபவம் இல்லை என்றும்
    அவரது நண்பர் உடையது என்றும்
    அநிருத்தன் சொல்கிறார்.
    ஒப்புக் கொள்வோம்.
    இணையத் தளத்தில் அவரது கதையை
    வாசிக்கும் நாழியில்
    அதைத் தீர உள்வாங்கிக் கொள்ளவே
    வாசிப்பவன் முயலுவானேயன்றி
    அது குறித்து, அவர் இணையத் தளத்தில்
    வேறு வேறு பக்கங்களில்
    அவர் என்ன எழுதிக் கொண்டிருக்கிறார் யென
    தேடித் திரிந்துக் கொண்டிருக்க மாட்டான்.
    நாளை…
    இந்தக் கதை நாளை
    அச்சில் தொகுப்பாக வரும்.
    அதில், அவர் அத்தகைய குறிப்புகளையெல்லாம்
    கட்டாயம் எழுதப் போவதும் கிடையாது.
    காலத்தின் பக்கங்களில் இருந்து வரும்
    வருங்கால வாசகன்
    இக்கதையை,
    அவரது அனுபவமென மயக்கம் கொள்ளக்கூடும்.
    அதில் தவறும் காணமுடியாது.
    இக்கதையில்
    தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளாது
    நண்பரின் அனுபவமாகவே எழுதுவதற்கென்ன?
    (பிரச்சனையே அதுதான்)
    அப்படி எழுதினால் கதை சிறப்பாக அமையாதாயென்ன?
    ஜெயமோகனுக்கு தெரியாத இலக்கிய யுக்தியா?
    சுந்தர ராமசாமியையே
    உண்டு இல்லையென்று ஆக்கியவராச்சே!
    அநிருத்தனுக்கு தெரியாதுப் போனால்
    மூத்த இலக்கிய சகாக்களிடம் கேட்டறியணும்.
    நன்றி
    -தாஜ்
    *
    நண்பர் ஜமாலனுக்கு…
    ஜெயமோகனின்
    இலக்கிய அரசியல் எனக்குப் பிடிப்பதில்லை.
    அவரை ஏன் என்று கேட்பவரே கிடையாது.
    கேட்கத் தோன்றினாலும்
    ஒதுங்கிப் போவோர்களே அதிகம்.
    பொருக்க முடியாமல்தான் கேட்டேன்.
    புனைபெயரில்
    அர்ச்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
    எத்தனைப் பக்கத்திற்கு வேண்டுமாலும்
    ஜெயமோகனை பாராட்டி எழுதி
    அவரது இணையத் தளத்திற்கு அனுப்பலாம்
    பூரித்துப் போவார்கள்.
    ஆனால்,
    ஏன் என்று மட்டும் கேட்டுவிடக் கூடாது.
    *
    உங்களது பார்வைக்கும்/ எழுதியமைக்கும்
    நன்றி.
    – தாஜ்
  12. 25/02/2011 இல் 20:13
    // இக்கதையில்
    தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளாது
    நண்பரின் அனுபவமாகவே எழுதுவதற்கென்ன? //
    இது என்ன விதண்டாவாதம்? எழுத்தாளர்கள் புனைவாக ‘தன்னிலை’யில் எழுதுவதே இல்லையா? அப்படி எந்த பிரதியும் விமர்சகர் படித்ததில்லையா? புனைவுக்கெல்லாம் விளக்கமாக ‘இது என் வாழ்க்கை குறிப்பல்ல’ என்று அடிக்குறிப்புப் போட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா?
    ஏன் ஒரு பெண் பாத்திரத்தின் பார்வையில் கதை சொன்னால் ‘ஜெயமோகன் எப்போது பாலின மாற்றுசிகிச்சை செய்து கொண்டார்?’ என்று சந்தேகபட்டுக் கொண்டிருப்பாரோ… கடவுளே!
    இதில் ‘என்னை அவருக்குப் பிடிக்காது’ என்று வேறு வருத்தப்பட்டுக் கொள்கிறார். மன்னிக்கவும்.. இப்படி மொண்ணையான விமர்சனப் பார்வையை வைத்துக் கொண்டு என்னைப் பிடிக்கவில்லை என்றால்… ஒன்றும் சொல்வதற்கில்லை.
  13. 27/02/2011 இல் 10:30
    கருத்து சொன்ன சகோதரர்கள் அநிருத்தன், ஸ்ரீதர், மணிசேகரன், ஜெயக்குமார் ஆகியோருக்கு நன்றி. குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு மவுத்தால் மனசு சரியில்லை. அதனால் பதிலெழுத தாமதம். மன்னியுங்கள். ’பச்ச கலர்’ கண்ணாடி மாட்டிக்கொண்டு படிப்பவரல்ல தாஜ்; அம்மாதிரி கண்ணாடி போட்டிருக்கும் முஸ்லிம்களால் இன்றுவரை புறக்கணிக்கப்படுபவர் என்பதை மட்டும் புரிந்துகொண்டால் நல்லது. ஒரு மாற்றுப்பார்வை; அவ்வளவுதான். இதிலென்ன இருக்கிறது? ’ஏ கொஞ்சம் அறிவ வளத்துக்கங்கப்பா’ என்றெல்லாம் சொல்வது தவறல்லவா? ஜெயகுமார், ’ஆபிதீன் அண்ணாச்சி ஏன் இப்படி?’ என்று கேட்காதீர்கள். என் தராசு சரியாகவே நிறுக்கும் – ஜானகிராமனின் கோதாவரிக்குண்டு கதையில் வரும் தராசு மாதிரி. அதில் பழைய பேப்பர்காரன் சொல்வான் : ‘நம்ம தராசு எளுதின கார்டுக்கும் எழுதாத கார்டுக்கும் வித்யாசம் காட்டும் சாமி!’
  14. அநிருத்தன் said,

    28/02/2011 இல் 09:51
    //எழுதாத கார்டுக்கும் //
    இது கிறுக்கின கார்டல்லவே :)
    ஆபிதீன் , இப்படி வெங்கத்தனமான விமர்சன கட்டுரைகளை போட்டால் கதை படிப்பவன் விமர்சகளை பற்றி என்ன நினைப்பான் ?
    நீங்களாவது தன்னிலையில் ஏன் கதை எழுதப்படுகிறது என தாஜுக்கு விளக்கியிருக்கலாமே ?
    100 நாற்காலிகள் என ஜெயமோகன் அடுத்த கதை எழுதியிருக்கிறார் , அதுவும் ஜெயமோகனின் சொந்த அனுபவமா என தாஜை விளக்கச் சொல்லவும் ,
    ஆனாலும் இவரை எல்லாம் விமர்சனம் எழுதவிட்டு விமசனம் எனும் தரப்பையே அவமானப்படுத்துகிறீர்கள்
  15. 28/02/2011 இல் 16:23
    நண்பர் தாஜ் அவர்களுக்கு…
    ஜெயமோகனி்ன் இலக்கிய அரசியல் குறித்து நீங்கள் எழுதலாம். ஆனால், இது அவரின் சொந்தக்கதையா? சோகக்கதையா? என்கிற ஆராய்ச்சியில் எனக்கு உடன்பாடில்லை. அப்படியான விமர்சனம் எழுத்தைவிட எழுதுபவரின் சொந்த வாழ்வை பேசுவதாக ஆகிவிடும். பிறகு யாருமே புனைவு என்று எதையும் எழுதமுடியாது. பிரதி குறித்த விமர்சனமே சரி.
    //ஜெயமோகனின்
    இலக்கிய அரசியல் எனக்குப் பிடிப்பதில்லை.
    அவரை ஏன் என்று கேட்பவரே கிடையாது.
    கேட்கத் தோன்றினாலும்
    ஒதுங்கிப் போவோர்களே அதிகம்.
    பொருக்க முடியாமல்தான் கேட்டேன்.//
    இதெல்லாம் எதிர்பார்த்தே நீங்கள் எழுதவேண்டும். அந்த அர்ச்சனைகளை பாராட்டாகக் கொள்ளுங்கள். “எவ்வளவு அடிச்சாலும் தாங்கும் நல்லவர்காளாகவே” நாம் இருப்போம். ஜெயமோகன் பற்றிய எனது விமர்சனம் ஒன்று மணல்வீடு என்கிற மாண்டோ சிறப்பிதழில் வருகிறது. வந்தபின் அதை பதிவிடுகிறேன். நானும் “நல்லவன்தான்” என்பதை நீங்கள் அப்போ புரிந்து கொள்ளலாம். சோற்றுக்கணக்கில் உள்ள நாட்டுக்கணக்கு பற்றிய கட்டுரையை எழுதி ஆபிதீன் காக்கா-சாருக்கு தான் அனுப்பலாம் என்று உள்ளேன். பதிவிட. அப்போ பார்க்கலாம்.
    //புனைபெயரில்
    அர்ச்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
    எத்தனைப் பக்கத்திற்கு வேண்டுமாலும்
    ஜெயமோகனை பாராட்டி எழுதி
    அவரது இணையத் தளத்திற்கு அனுப்பலாம்
    பூரித்துப் போவார்கள்.
    ஆனால்,
    ஏன் என்று மட்டும் கேட்டுவிடக் கூடாது.//
    நன்றி
    *
    //உங்களது பார்வைக்கும்/ எழுதியமைக்கும்
    நன்றி.
    – தாஜ்//
  16. 28/02/2011 இல் 19:17
    //// இவ்வளவுதானாய்யா உங்க அறிவு?
    ஒரு கதையை வாசிக்கும் விதம் இதாய்யா ?
    ஏ கொஞ்சம் அறிவ வளத்துக்கங்கப்பா .
    எனக்கு ஆபிதீனை பாத்தா பாவமா இருக்கு .
    பச்சக்கலர் கண்ணாடிய மாட்டிட்டு பாத்தா எழவு அப்பிடித்தாம்லே தெரியும்
    ஏம்வே பயப்படமாட்டாரு ? அதான் தாஜ் மாதிரி ஆளுக உண்டேவே ?
    ஆபிதீன் , இப்படி வெங்கத்தனமான விமர்சன கட்டுரைகளை போட்டால்///////
    ஏம்வே அநிருத்தன், இப்டில்லாம் எலுதுறது என்னதனம்வே?
    எதுக்குவே அனாமத்து எலக்கியம்?
    அவுரு அப்டி என்னதாஞ்சொல்லிப்போட்டாருவே?
    என் பாஷைக்கு வந்துர்றேன்..
    தாஜ் சொல்ல வந்தது மிக நுட்பமான ஒரு விஷயம். புனைவையும் உண்மையையும் ஒரு மாதிரி கலந்து குழப்பி, பிற்காலத்தில் அது உண்மையாக எடுத்துக்கொள்ளப்பட்டுவிடுமோ என்ற அவரது ஐயத்தைத்தானே சொல்கிறார்?
    அப்படி எடுத்துக்கொள்ளப்பட வேண்டியே இது போல புனையப்பட்டிருக்கிறது என்று குற்றமும் சாட்டுகிறார்.
    அதுவும் ஒரு இலக்கியப் படைப்பைப் பற்றி ஒரு விமர்சனம் என்ற அளவிலேயே அதை முன்வைத்திருக்கிறார்.
    அதோடு அந்தப் படைப்பாளியின் “நோக்கம்” எந்த அளவுக்கு நேர்மையானது என்றவொரு கேள்வியையும் எழுப்புகிறார். நேரிடையாக.
    இதெல்லாம் என்ன தெய்வக்குத்தமா? எதுக்குவே இம்புட்டு கோவம், அர்ச்சனை? ஒரு விமர்சனத்துக்கு பதில் எழுத எதுக்கு ஒளியனும்? இது வெங்கத்தனமில்லயா? (பொட்டைத்தனமோ?) நேரா வாதம் செய்யலாம்லா?
    சொந்தப் பெயரில் எழுதும் தாஜ், நீர் இம்புட்டு அர்ச்சித்தும் உம்மை “ஒரு அனாமத்து”ன்னு கூட சொல்லலை. கவனிச்சீரா?
    அதுதாம்வே நீர் சொன்ன “”””தாஜ் மாதிரி ஆள்”””””.
    கண்ணாடியே போடாத தாஜப்பாத்து பச்சக்கண்ணாடிங்கிறிரு;
    போய் வைத்தியம் பாத்துக்கிரும்வே.
    இல்லைனா காவிக்கண்ணாடியவாவது கழட்டி வையும்.
    அப்புறம் இன்னொரு விஷயம்: ஜெயமோகன் அவர்களின் எழுத்துக்களைப் படித்து மலைத்து மலைத்து ரசிக்கும் கூட்டத்துலதான் நான் இன்னும் இருக்கேன். ஆனாலும் அதுக்காக ஒரு நெருடலும் அவர்மீது வரக்கூடாதுன்னு இல்லையே? அவரது வலைப்பக்கத்தில் முதன்முதலில் “அறிமுகம்” பார்த்தபோதே அது வந்தது. ஒரு இரண்டு வருடக்காலக்கட்டத்தில் அவர் அடைந்த இருவேறு நிலைகளின் மிகப் பெரிய முரணைச் சொன்னபிறகு, (இது புனைவுன்னோ, நண்பரின் சரிதம்னோ எந்த ஃபோர்ரத்துலயும் சொல்லிருக்க மாட்டருவே?) அவரின் தற்போதைய நிலைப்பாட்டைச் சொல்லவில்லை. தெளிவிக்கவில்லை. ஏன்? தெரிஞ்சா அனாமத்தாவே சொல்லும்வே! கீழே உள்ளத படிச்சுட்டு!!
    //1982ல் கல்லூரிப்படிப்பை முடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறினேன்.
    என் உயிர் நண்பனாக இருந்த ராதாகிருஷ்ணனின் தற்கொலை என்னை அமைதியிழக்கச் செய்தது. இக்காலகட்டத்தில் குமரி மாவட்டத்தில் வேரூன்றிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொடர்பினால் ஆன்மீக நூல்களில் நாட்டம் ஏற்பட்டது. ஆகவே துறவியாக வேண்டுமென்ற கனவு உருவாகியது. இருவருடங்கள் பலவாறாக அலைந்திருக்கிறேன். திருவண்ணாமலை, பழனி, காசி ஆகிய ஊர்களில் இருந்திருக்கிறேன். பல சில்லறைவேலைகள் செய்திருக்கிறேன். ஆர்.எஸ்.எஸ் தொடர்பும் இக்காலகட்டத்தில் அவ்வப்போது இருந்தது. 1984ல் கேரளத்தில் காஸர்கோடு தொலைபேசி நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலைக்குச் சேர்ந்தேன். தொழிற்சங்கத்தின் பெரிய கம்யூனில் தங்கியிருந்தேன். இடதுசாரி இயக்கங்களில் ஆர்வமும் பங்களிப்பும் ஏற்பட்ட காலம். அங்கிருந்த நூலகங்களில் தொடர்ச்சியாக வாசிக்க ஆரம்பித்தேன். இலக்கிய, கோட்பாட்டு விவாதங்களில் ஈடுபடும் பக்குவம் ஏற்பட்டது.//
  17. அநிருத்தன் said,

    01/03/2011 இல் 17:32
    மஜீது அண்ணே ,
    ஜெயமோகன் என்னதையாம் எழுதினு போகட்டும் வாழ்க்கை குறிப்பில , அதைபத்தி நான் பேசலை ,
    ஆனாலும் அநியாயத்துக்கு புனைவை இப்படி விமர்சனம்ங்கற பேரால காமடி செஞ்சா கடுப்பாகாதோ ?
    நியாயமா இந்த கேள்வியை ஆபிதீனே கேட்டிருக்கணும் , காமடியா போகட்டும்னு இங்க போட்டுட்டார் , இனி தாஜ் எதை எழுதினாலும் கிண்டலாத்தானே பாப்பம் ? அதைதான் சுட்டினேன்.
  18. 02/03/2011 இல் 08:24
    அன்புள்ள ஆபிதீன்,
    நீங்கள் என்னுடைய சோற்றுக்கணக்கு கதையைப்பற்றி ஒரு அபத்தமான கட்டுரையை எழுதியிருப்பதாகச் சொன்னார்கள். நீங்கள் ஒருபோதும் அப்படி எழுதமாட்டீர்கள் என நான் சொன்னேன். இல்லை எழுதியிருக்கிறார் என்று இந்த இணைப்பை அனுப்பினார்கள். உங்கள் மேலுள்ள மதிப்பால் அதை பார்த்தேன். ஆம்,நீங்கள் எழுதவில்லைதான், ஆனால் ஒரு மதவெறியரின் அபத்தமான கடிதத்தை வெளியிட்டதன் வழியாக என் மதிப்பில் மிகவும் தாழ்ந்துவிட்டீர்கள் என்று சொல்ல விரும்புகிறேன்.
    இன்றுவரை உலக அளவில் எழுதப்பட்ட புனைவுகளில் ஏறத்தாழ நேர்ப்பாதி ’நான்’ என்ற தன்மைநிலையில் நின்றுகொண்டு சொல்லப்படுபவை. அவற்றில் சில ஆசிரியரே கூறுவதாக இருக்கும். பெரும்பாலானவை கதாபாத்திரத்தின் கூற்றுக்கள். என் எழுத்தில் அப்படி கதாபாத்திரத்தின் குரலில் பேசும் கதைகள் ஏராளமாக உள்ளன. சமீபத்தில் வெளிவந்த அனல்காற்று, இரவு, உலோகம் போன்ற நாவல்களேகூட மையக்கதாபாத்திரத்தின் குரலில் பேசும் நாவல்கள்.
    ஒருகதை பல இடங்களிலாக தாவிச்செல்வதாக இருந்தால் கதைக்கு ஒருமையை கூட்ட தன்னிலை உத்தி பயன்படுத்தப்படுகிறது. ஒருகதாபாத்திரத்தின் அகவயமான பயணத்தை முன்னிலைப்படுத்தவும் அவ்வுத்தி உதவுகிறது.. நாலைந்து கதைகளை படித்த அனுபவம் உள்ள ஒருவருக்கே புரியக்கூடிய விஷயம் இது.. ஒருகதையை சில பத்திகள் படிப்பதற்குள்ளாகவே அது எந்தகதாபாத்திரம் என தெளிவாக வாசகன் புரிந்துகொள்ளமுடியும். சோற்றுக்கணக்கு கதையில் அது அப்பட்டமாகச் சொல்லப்பட்டுள்ளது.
    அதை உணரும் அறிவுத்திறன் எழுதியவருக்கு இல்லாமலிருக்கலாம். உங்களுக்கு இருந்திருக்க வேண்டும்.
    மதம் சார்ந்த இனம் சார்ந்த அடையாளங்களுக்குள் எழுத்தாளனின் அகம் சிக்கிக்கொள்ளக்கூடாது. இது எனக்கு எப்போதும் நான் சொல்லிக்கொள்வது, உங்களுக்கும் சொல்ல விரும்புகிறேன்
    ஜெ
  19. 02/03/2011 இல் 08:55
    ஆபிதீன்,
    ஒரு தனிப்பட்ட குறிப்பு. தாஜ் என்பவர் ஒருகாலத்தில் எனக்கு சில கடிதங்கள் எழுதியிருக்கிறார். அதிகமும் மதவெறி தொனிக்கும் கடிதங்கள். அன்றைய என் மனநிலையில் கொஞ்சநாள் அக்கடிதங்களுக்கு நிதானமாக விளக்கி பதில்கள் போட்டேன். இன்றென்றால் ஒருபோதும் மதவெறியுடன் உரையாட முயலமாட்டேன். பின்னர் விட்டுவிட்டேன். ஆனால் என்னை தனிப்பட்டமுறையில் தெரியும் என இவர் இன்று மீளமீள சொல்லிக்கொண்டிருக்கிறார். ஒரு கூட்டத்தில் ஹலோ சொன்னதுக்கு மேலாக இவர் முகம் எனக்கு அறிமுகம் இல்லை. உங்கள் இணையதளம் மூலம் மீண்டும் இந்த அபத்தமான பொய் நிலைநாட்டப்படுகிறது. அதற்கும் என் எதிர்ப்பை தெரிவித்துக்கொள்கிறேன்.
    உங்களைப்பற்றிய என் நம்பிக்கை தகர்ந்தது சமீபத்தைய பெரும் வருத்தங்களில் ஒன்று
  20. 02/03/2011 இல் 10:03
    இரண்டு நண்பர்களுக்கிடையில் மாட்டிக்கொண்டு விழிக்கிறேன்!
    //உங்களைப்பற்றிய என் நம்பிக்கை தகர்ந்தது சமீபத்தைய பெரும் வருத்தங்களில் ஒன்று// உங்கள் மேலுள்ள நம்பிக்கையும் பிரியமும் எனக்கு குறையாது. வருகைக்கு நன்றி ஜெ.
  21. raam.srini said,

    02/03/2011 இல் 11:36
    தாஜ்,
    உங்களுக்கு தெரியாத மற்றொரு ரகசியம் ஜெ.மோ பற்றி…அவர் சுமார் முப்பது வருடங்கள் மலைப்பிரதேசங்களில் வெள்ளைக்கார துரைகளுக்கு அடிமையாக ஊழியம் செய்துள்ளார்..ஆதாரம் அவரது ஊமைச்செந்நாய் கதை..படிக்கலைங்களா…(பிறப்புக்கணக்கு போட்டுப் பார்த்தால் அவர் பிறக்கும் முன்பிருந்தே இதை செய்து வந்ததுபோலத் தெரிகிறது..)
    ‘நான்’ என்று எழுதுவது கதை சொல்லும் உத்தி என்றே புரியாமல் ஒரு ‘விமர்சனம்’ (வியாக்கியானம்!!!)..இதில் விஷ்ணுபுரம் படித்து அவரிடமே நேரடியாக விவாதித்த ‘வரலாறு’ உடையவன் என்ற தொடைதட்டல்கள் வேறு..
  22. Henry said,

    02/03/2011 இல் 13:14
    அந்த கதையில் வருவது நான்தான் என்று சொல்லாத ஒரு எழுத்தாளரை பிடித்து, அது இவர்தான் என்று தப்பாக நினைத்துக்கொண்டு, பின்னர் கதையைப் படித்தால் அவரைப் போல இல்லையே என்று எழுதுவது, இதுவரை நான் படித்த நகைச்சுவையிலேயே உச்ச கட்டம்!
    அடப்பாவிகளா, என்னைப்போன்ற பாமரமக்கள் எல்லாம் உங்களைப்போன்ற ப்ளாக்கர்களைப் படிக்கிறோம் என்கிற உணர்வுகூட இல்லையா?
    இந்த கருமத்துக்கு இலக்கிய விமர்சனம்-னு பேரூ வேற!
    இதுக்கு வேலயத்துப்போய் அந்த எழுத்தாளர் பதில் சொல்லியிருக்கார்!
    இலக்கிய விமர்சகர் அப்படிங்கிற வேலைக்கு இதைவிட பெரிய அவமானத்த அசிங்கத்த வேறு ஒருத்தர் இனிமே செய்ய முடிமாங்குறது சந்தேகம்தான்.
  23. சபரீசன் said,

    02/03/2011 இல் 14:15
    தாஜ் அவர்கள் பெரியாரியர் போல சொல்கிறார்கள் , ஆனால் இந்த கட்டுரையில் தெரிவது அவருடைய மதசாய்வுதான்.
    வைக்கம் முகமது பஷீரை பற்றி தமிழில் தொடர்ந்து எழுதிவருபவர் ஜெயமோகன் , தோப்பில் முகமது மீரானின் படைப்புகளை தொடர்ந்து தமிழின் சிறந்த நாவல்களாக முன்னிருத்துகிறார் , மனுஷ்ய புத்திரனின் வியாபார குயுக்த்திகளைத்தான் வெறுக்கிறார் , அவர் கவிதைகளை அல்ல .
    அடுத்த தலைமுறை எழுத்தாளராக ஜாகீர்ராஜாவை சொல்கிறார் , இதையெல்லாம் மறைத்துவிட்டு ஜெயமோகனுக்கு முஸ்லீம்களை பிடிக்காது என்று சொல்வது மதவெறி கண்ணோட்டமின்றி வேறென்ன ?
  24. சபரீசன் said,

    02/03/2011 இல் 14:16
    இவர் விஷ்ணுபுரத்தை விஷ்ணுபுராணம் என்று நினைத்து படித்து அதிலும் மதவெறியை கண்டிருப்பார் என நினைக்கிறேன்
  25. Jeyakumar said,

    02/03/2011 இல் 15:43
    //ஜெயகுமார், ’ஆபிதீன் அண்ணாச்சி ஏன் இப்படி?’ என்று கேட்காதீர்கள். என் தராசு சரியாகவே நிறுக்கும் – ஜானகிராமனின் கோதாவரிக்குண்டு கதையில் வரும் தராசு மாதிரி. அதில் பழைய பேப்பர்காரன் சொல்வான் : ‘நம்ம தராசு எளுதின கார்டுக்கும் எழுதாத கார்டுக்கும் வித்யாசம் காட்டும் சாமி!’//
    இது உங்களின் கருத்தாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் தளத்தில் இப்படி ஒரு மோசமான பர்வையில் ஒரு அலசல் வந்ததற்குத்தான் கேட்டேன். அதற்கு எனது தராசு சரியாகவே நிறுக்கும் என சொல்லி விட்டீர்கள். நன்றி.
    எனக்கு நம்பிக்கையெல்லாம் தளர்ந்து போகும் அளவு ஏதும் உங்களிடம் ஏதுமில்லை எனினும், நல்ல கட்டுரைகளை அருமையாய் எழுதும் வலைப்பதிவர்களில் ஒருவர் இப்படி எல்லாமா தனது தளத்தை பயன்படுத்துவது என்ற ஆதங்கத்தில் சொன்னது எனது கருத்து. இனிமேல் பிடித்ததை மட்டும் படித்துவிட்டு சென்று விடுகிறேன்.
    நன்றி.
    ஜெயக்குமார்
    • abedheen said,

      02/03/2011 இல் 16:13
      அன்பு ஜெயக்குமார், என்ன இப்படி புரியாமல் பேசுகிறீர்கள்? நான் செய்தது ஒரு கிண்டல். எனக்கு பிடித்த நகைச்சுவை அது. ‘பழைய பேப்பர்காரன் தராசு தெய்வீகக் கொல்லன் கைவேலை. ஆனையை வைத்தால் ஆறுபலம் காட்டும்; ஆறுமாச தினசரிக் காகிதம் எந்த மூலை?’ என்பார் ஜானகிராமன் கதையின் நாயகன். எனக்கு யார்மேலும் வெறுப்போ கோபமோ இல்லை.
  26. rameshk said,

    02/03/2011 இல் 18:00
    // ’விமர்சகனின் பார்வையில்’ சிறந்த நாவல்களில் ஒன்றாக தோப்பில் முகமது மீரானுடையதைச் சொன்னாலும், குறிப்பிடவேண்டிய நண்பர்களான ஜாகீர்ராஜாவையும் , மீரான்மைதீனையும் அவ்வப்போது குறிப்பிட்டாலும் பொதுவாக தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களை (மனுஷ்யபுத்திரன் முஸ்லிமா என்று தெரியவில்லை!) ஜெயமோகன் கண்டுகொள்வதில்லை என்பது உண்மைதான்.
    இது ஆபிதீன் அவர்களின் குற்றச்சாட்டு. சரி.. அடுத்த வரி…
    ///ஆனால் ’தோப்பிலை’த் தவிர்த்து (படைப்பிலக்கியத்தில் ) யாரும் தொடர்ந்து இயங்குவதில்லையே.. நாமும் புரிந்துகொள்ள வேண்டும்.
    என்ன சொல்ல வரிங்க ஆபிதீன். தொடர்ந்து எழுதாவிட்டாலும் ஜெயமோகன் தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களை பற்றி சும்மா ஏதாவது எழுதணுமா? :)
  27. rameshk said,

    02/03/2011 இல் 18:26
    ////////////இலக்கிய ஆர்வம் கொண்ட
    இஸ்லாமிய இளவல்களின் எண்ணிக்கை
    அவருக்கு வியப்பூட்டியிருக்கலாம்.
    அதையொட்டி
    அவரது வாழும் வியாபார ஞானம் விழித்துக்கொண்டிருக்கலாம்.
    அவர்களை தன் வட்டத்திற்குள் வைத்துப் பார்க்கும் முகமாக
    அவர் கேள்விப்பட்ட
    ‘கெத்தேல் சாகிப்’ சாப்பாட்டுக் கடையை
    இக்கதையில்
    மிகச் சரியாகப் பயன் படுத்திக்கொண்டிருக்கலாம்../////////////
    “வியப்பூட்டியிருக்கலாம், விழித்துக்கொண்டிருக்கலாம், பயன் படுத்திக்கொண்டிருக்கலாம்” …. அடா .. அடா.. அடா.. என்ன ஒரு ஆதாரமற்ற, வெட்கங்கெட்ட வறட்டு கற்பனை விமரிசனம்?
    ////////நான்,
    அவரது பெரும்பாலான கதைகளை
    வாசித்தவன் என்கிறவகையில்
    இஸ்லாமிய கதாபாத்திரங்கள்
    அவரது கதைகளில்
    சொல்லும் அளவில் இருந்தது இல்லை.
    இத்தனைக்கும் அவர்
    சாதி/ மத/ இன/ பேதம் பாராட்டாத
    நாராயண குருவின் வழி பேணுபவர்
    ஆனாலும் இஸ்லாமியன் என்றாலே
    இவருக்கு ஏனோ ஆவதில்லை..
    இஸ்லாமியர்களில்
    நல்லவர்களே இல்லை என நம்பும்
    நல்லவர்களுக்கு மட்டுமே இவர் நண்பர்.
    இஸ்லாமியர்களின் நிஜங்களுக்கு குரல் கொடுத்து
    அவர்களுக்கு ஆறுதலாக அவ்வப்போது
    மீடியாக்களில் வழக்காடி வரும் பேராசிரியர். அ.மார்க்ஸை,
    அதற்காகவே கண்டித்தவர் இவர்.
    அப்படியான ஜெயமோகன்
    இன்றைக்கு…
    ‘கெத்தேல் சாயபு’ என்கிற இஸ்லாமியரின்
    மாண்புகள் எதிரொலிக்க
    மெச்சி எழுதினார் என்பது
    நம்ப முடியாத செய்தி.
    எழுதியிருக்கிறாரே… என்றாலும்
    ஆத்மார்த்தமாக அவர் எழுதியிக்கவே மாட்டார்.
    அது அவருக்கு வராது.
    அப்படியொரு பார்வையே அவருக்கு கிடையாது////////////////////
    அ.மார்க்ஸ் தான் ஜெயமோகனை இந்துத்துவ வெறியர் என்று எங்கும் கூறுகிறார் …அ.மார்க்ஸ் அவர்களின் கருத்துக்களையே ஜெமோ விமர்சித்து நான் படித்திருக்கிறேன். அவரது மதத்தை எங்கும் குறிப்பிட்டதில்லை..
    தாஜ் அவர்களை ஜெயமோகன் விளித்திருக்கும் விதம் முற்றிலும் சரி..
  28. Ram said,

    03/03/2011 இல் 08:55
    You both guys (Abidheen & Taj) should be ashamed of yourself. It is such a simple storytelling technique and you can’t take them straight ?
    No wonder everybody disagrees with your views.
  29. Jeyakumar said,

    03/03/2011 இல் 10:40
    //அன்பு ஜெயக்குமார், என்ன இப்படி புரியாமல் பேசுகிறீர்கள்? நான் செய்தது ஒரு கிண்டல். எனக்கு பிடித்த நகைச்சுவை அது//
    சரி, சரி..
    கோதாவரி குண்டு கிடைச்சா எனக்கு அனுப்புங்களேன்..
    ஜெயக்குமார்
  30. radhakrishnan said,

    09/03/2011 இல் 15:43
    sorry,abitheen,
    you sacrificed ur quality for the sake of friendship..

No comments:

Post a Comment