Sunday, August 31, 2014

ஆபிதீன் கடிதம்

அன்புள்ள ஆபிதீன்,
நீங்கள் என்னுடைய சோற்றுக்கணக்கு கதையைப்பற்றி ஒரு அபத்தமான கட்டுரையை எழுதியிருப்பதாகச் சொன்னார்கள். நீங்கள் ஒருபோதும் அப்படி எழுதமாட்டீர்கள் என நான் சொன்னேன். இல்லை எழுதியிருக்கிறார் என்று இந்த இணைப்பை அனுப்பினார்கள். உங்கள் மேலுள்ள மதிப்பால் அதை பார்த்தேன். ஆம்,நீங்கள் எழுதவில்லைதான், ஆனால் ஒரு மதவெறியரின் அபத்தமான கட்டுரையை வெளியிட்டதன் வழியாக என் மதிப்பில் மிகவும் தாழ்ந்துவிட்டீர்கள் என்று சொல்ல விரும்புகிறேன்.
இன்றுவரை உலக அளவில் எழுதப்பட்ட புனைவுகளில் ஏறத்தாழ நேர்ப்பாதி ’நான்’ என்ற தன்மைநிலையில் நின்றுகொண்டு சொல்லப்படுபவை. அவற்றில் சில ஆசிரியரே கூறுவதாக இருக்கும். பெரும்பாலானவை கதாபாத்திரத்தின் கூற்றுக்கள். என் எழுத்தில் அப்படி கதாபாத்திரத்தின் குரலில் பேசும் கதைகள் ஏராளமாக உள்ளன. சமீபத்தில் வெளிவந்த அனல்காற்று, இரவு, உலோகம் போன்ற நாவல்களேகூட மையக்கதாபாத்திரத்தின் குரலில் பேசும் நாவல்கள்.
ஒருகதை பல இடங்களிலாக தாவிச்செல்வதாக இருந்தால் கதைக்கு ஒருமையை கூட்ட தன்னிலை உத்தி பயன்படுத்தப்படுகிறது. ஒருகதாபாத்திரத்தின் அகவயமான பயணத்தை முன்னிலைப்படுத்தவும் அவ்வுத்தி உதவுகிறது.. நாலைந்து கதைகளை படித்த அனுபவம் உள்ள ஒருவருக்கே புரியக்கூடிய விஷயம் இது.. ஒருகதையை சில பத்திகள் படிப்பதற்குள்ளாகவே அது எந்தகதாபாத்திரம் என தெளிவாக வாசகன் புரிந்துகொள்ளமுடியும். சோற்றுக்கணக்கு கதையில் அது அப்பட்டமாகச் சொல்லப்பட்டுள்ளது.
அதை உணரும் அறிவுத்திறன் எழுதியவருக்கு இல்லாமலிருக்கலாம். உங்களுக்கு இருந்திருக்க வேண்டும்.
மதம் சார்ந்த இனம் சார்ந்த அடையாளங்களுக்குள் எழுத்தாளனின் அகம் சிக்கிக்கொள்ளக்கூடாது. இது எனக்கு எப்போதும் நான் சொல்லிக்கொள்வது, உங்களுக்கும் சொல்ல விரும்புகிறேன்
ஜெ

http://abedheen.wordpress.com/2011/02/24/taj-jeyamohan-story/

No comments:

Post a Comment